யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட அமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக ஆயிரத்து 359.35 மில்லியன் ரூபா வரியுடனான நிதியை சென்ட்ரல் இன்ஜினியரின் சேர்விஸ் தனியார் கம்பனிக்கு விடுவிக்க அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை துணைப் பேச்சாளர் தயாசிறி ஜெயசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.

“திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய போதுமான வசதிகள் இருக்கவில்லை. 2015ஆம் ஆண்டு வரவு – செலவு திட்ட மதிப்பீட்டின் கீழ் வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர மருத்துவப் பிரிவை அமைக்கும் 2ஆம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பணி தொடர்பில் மத்திய ஆலோசனை பிரிவினரால் தற்போது இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைவாக 2ஆம் கட்ட அமைப்புப் பணிகளை திட்டமிடல் மற்றும் செயற்படுத்தலுக்கு ஆயிரத்து 359.35 மில்லியன் ரூபா வரியுடனான நிதியை சென்ட்ரல் இன்ஜினியரின் சேர்விஸ் தனியார் கம்பனி என்ற நிறுவனத்துக்கு வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது” என்று தயசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.