இந்தோனீஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 91 பேர் உயிரிழப்பு

இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை ஞாயிற்றுக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 91 பேர் இறந்துள்ளது தெரிய வருகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் மிக தீவிரமாக இல்லை. பூமியின் மேல் பரப்புக்குக் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மட்டுமே இது ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால், இந்தோனீஷியாவிற்கு அருகே உள்ள பாலி தீவில் மக்கள் கத்திக்கொண்டே தங்கள் வீடுகளை விட்டு ஓடுவதை ஒரு காணொளி பதிவு காண்பிக்கிறது.

கடற்கரைகள் மற்றும் மலையேற்ற பாதைகளுக்கு பிரசித்திபெற்ற சுற்றுலாதளமான லோம்போக் தீவில் கடந்த வாரம் 16 பேர் உயிரிழக்க காரணமான நிலநடுக்கத்தை அடுத்து, நேற்று மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களில் இந்த எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது.

லோம்போக் தீவில் உள்ள முக்கிய நகரமான மடராமில் பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக இந்தோனீஷியாவின் பேரிடர் தடுப்பு முகமையை சேர்ந்த பேச்சளார் ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த பெரும்பாலான கட்டடங்கள் தரம்குறைந்த மற்றும் வலுவில்லாத கட்டுமான பொருட்களால் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது.

அதிகரிக்கும் பதற்றம்

பாலி தீவை விட பரப்பளவில் லோம்போக் தீவு சற்று பெரியதாகும். இந்த இருத்தீவுகளிலும் மூன்றிலிருந்து நான்கு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். மேலும், உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சுற்றுலா வாசிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் மடாரம் நகரத்தில் வீடுகளில் இருந்த மக்கள் வெளியே ஓடினர். “இங்குள்ள அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்துவிடடோம். மிகுந்த பதற்றத்தில் இருந்தோம்” என அப்பகுதியில் வசிக்கும் இமான் தெரிவித்தார்.