புதிய பிரபாகரன்!! – கருணாகரன்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் விட பெரீய அவலமெல்லாம் அதற்குப் பிறகுதான் நடக்கின்றனவா? என்று சிலவேளை எண்ணத் தோன்றுது.

ஏனென்றால், “பிரபாகரனுக்கு நிகராக இதோ இன்னொரு பிரபாகரன், எங்கள் பிரபாகரன்” என்று சீமானைப் பற்றிப் பகிரங்கமாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார் பாரதிராஜா. சீமானோ தானே புலிகளின் வாரிசு.

தமிழர்களின் திசைகாட்டி. புதிய வரலாற்றுப் படைப்பாளி என்றெல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் எப்படிச் சகித்துக் கொள்வது என்று தெரியவில்லை.

இவ்வளவுக்கும் இவர்கள் இருவரும் ஒரேயொரு தடவைதான் பிரபாகரனை நேரில் பார்த்திருக்கிறார்கள்.

அதுவும் அரசியல் ரீதியான சந்திப்பாகவோ ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கான சந்திப்பாகவோ இருக்கவில்லை. பிரபாகரன் அப்படியொரு சந்திப்பை பொதுவாக வெளியே யாரோடும் செய்வதில்லை.

அவர் தன்னுடைய தீர்மானத்தின்படியே போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். தன்னுடைய அரசியலிலும் போராட்ட வழிமுறைகளிலும் யாரையும் அவர் கலக்க விடுவதில்லை.

பாரதிராஜாவும் சீமானும் பிரபாகரனைச் சந்தித்தது, 2004க்குப் பிறகே. அதற்கு முன்பு 1980 களில் தமிழ்நாட்டில் பிரபாகரன் தங்கியிருந்த காலத்தில் பாரதிராஜாவை அவர் சந்திக்கவில்லை. அவர் மட்டுமல்ல, புலிகளின் தரப்பிலிருந்து எவரும் சந்திக்கவில்லை.

அதற்கு அவசியமும் இருக்கவில்லை. ஆனால் அப்பொழுதே பாரதிராஜா சினிமாவில் புகழடைந்திருந்தார். இருந்தாலும் பாரதிராஜாவைச் சந்திக்க வேணும் என்று புலிகள் எண்ணவில்லை. பாரதிராஜாவையே அக்கறைப்படாதவர்கள் சீமானையா தேடியிருப்பார்கள்? அப்படியொரு பெயரே அப்பொழுதில்லை.

2002 இல் ரணில் – பிரபா உடன்படிக்கையில் மலர்ந்திருந்த போர்நிறுத்தக் காலத்தில் இந்தியாவில் இருந்து சில பிரபலங்கள் வன்னிக்கு வந்திருந்தனர்.

கூடுதலாகச் சினிமாத்துறை சார்ந்தவர்கள். உதிரிப்பூக்கள் மகேந்திரன், அவருடைய மகன் ஜான் (விஜய் நடித்த சச்சின் படத்தின் இயக்குநர்), பாரதிராஜா, கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, தங்கர் பச்சான், சீமான், இயக்குநர் புகழேந்தி, ஓவியர் புகழேந்தி, ஒளிப்பதிவாளர் சந்தோஸ், பாடகர்கள் எஸ்.என். சுரேந்திரன், ரீ.எல். மகாராஜன், நடிகர்கள் நந்தா, மணிவண்ணன், மதுமிதா, நீலிமா எனப் பலர்.

இவர்களில் எவரோடும் பிரபாகரன் அரசியல் பேசவேயில்லை. அதற்காக அவர்கள் வரவும் இல்லை. அரசியலுக்காகவோ போராட்டத்துக்காகவோ (ஆட்லறி அடிப்பதற்காக) புலிகள் அவர்களை அழைக்கவும் இல்லை.

அவர் (பிரபாபரன்) பேசியதெல்லாம் புலிகளுக்கான சினிமா, புலிகளின் இசைத்துறை, கலைத்துறை போன்றவற்றின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று மட்டுமே.

வந்தவர்கள் எல்லாம் புலிகளைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்றனர். அநேகமாக சினிமா நாயகப் பிம்பங்களோடு வாழ்ந்தவர்களுக்கு நிய நாயகர்கள், நிஜ வீரர்களாக நின்றது அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ உண்டாக்கியிருக்கலாம். அப்படியே அசந்து போனர்கள்.

“உங்களுக்காக எதையும் செய்வோம். இதைக்கூடவா எங்களால் செய்ய முடியாது” என்று உருகினார்கள். சிலர் சொன்னார்கள், “இனி ஈழத்தில் எடுக்கப்படும் சினிமாவே உலக சினிமாவை ஆளப்போகிறது. தமிழ்ச்சினிமாவுக்குப் புதிய முகவரியே கிடைக்கப்போகிறது” என்றெல்லாம்.

இதையிட்டு பிரபாகரன் நிச்சயமாக உள்ளுக்குள்ளே சிரித்திருப்பார். ஆனாலும் வெளியே அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

இதற்காக வன்னிக்கு அழைக்கப்பட்ட அத்தனை பேருடைய செலவையும் புலிகளே பார்த்துக் கொண்டனர். வந்தவர்களில் மகேந்திரன் பெறுமதியான வேலைகள் சிலவற்றைச் செய்தார்.

புலிகளின் திரைப்படத்துறையைச் சேர்ந்த போராளிகளுக்கும் கலைஞநர்களுக்கும் சினிமாவைப் பற்றிக் கற்பித்தார். ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு மேலாக வன்னியில் தங்கியிருந்தார் மகேந்திரன்.

அப்பொழுது “திரைக்கதை என்பது” “நடிப்பு என்பது” என இரண்டு புத்தகங்களை எழுதினார். அவற்றை “நிதர்சனம்” சார்பில் வெளியிட்டேன்.

தங்கியிருந்த காலத்தில் உலக சினிமா முதல் தமிழ்ச்சினிமா வரையில் பல படங்களைக் காண்பித்தும் விளக்கியும் புதிய சினிமாவைப் பற்றிய சிந்தனையை உருவாக்கினார்.

கூடவே சில குறும்படங்களையும் உருவாக்கினார். அதில் முக்கியமானது, எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “இடைவெளி” சிறுகதையை “1996” என்ற பெயரில் எடுத்த படம். 22 நிமிடங்கள் கொண்ட இந்தப் படத்தை மகேந்திரனின் மேற்பார்வையில் புலிகளின் திரைத்துறை உருவாக்கியது.

முல்லை யேசுதாசனும் மகிழும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். அடுத்த படம் “பாதணி”. அதை மகேந்திரனின் மகன் ஜான் இயக்கினார்.

அதைத் தொடர்ந்து “ஆணி வேர்” என்ற முழுநீளப்படம் உருவாக்கப்பட்டது. இதில் நடிப்பதற்காக இந்தியாவிலிருந்து நந்தா, மதுமிதா, நீலிமா போன்றோர் வந்திருந்தனர். இந்தப்படத்தையும் ஜானே நெறிப்படுத்தினார்.

தங்கர் பச்சான் புதிய சினிமா ஒன்றுக்கான கதை, களம் போன்றவற்றைப் பற்றிப் பேசினார். கொக்கிளாய் தொடக்கம் மண்டைதீவு, நெடுந்தீவு வரை சென்று லொக்கேஷன் பார்த்தோம். ஆனால், அவருடைய முயற்சிகள் எதுவும் பிறகு வன்னியில் நடக்கவில்லை.

இயக்குநர் புகழேந்தி ஏற்கனவே தான் எடுத்திருந்த “காற்றுக்கென்ன வேலி” என்ற படத்தின் நிமித்தமாக அழைக்கப்பட்டிருந்தார். அடுத்துப் புதிய படமொன்றை உருவாக்கப்போகிறேன் என்று சொன்னார் புகழேந்தி. அதற்குப் பிறகு அப்படியொன்று வந்ததாகச் சேதியில்லை.

சீமான் வந்திருந்து இனத்தனித்துவம் பற்றியே பேசினார். “தமிழினத்தின் சிறப்பு என்ன என்று தெரியுமா?” என்று கேட்டு விளக்கமளித்தார். “தமிழர்களுக்கெல்லாம் தலைவராக இன்று யார் இருக்கிறார் என்று அறிவீர்களா?” என்று கேட்டார். “நீங்கள் யாருமே பிரபாகரனைச் சரியாக அறியவில்லை” என்று கடிந்தார்.

இதையெல்லாம் கேட்டுப் பலர் குழம்பியே விட்டார்கள். குறிப்பாகப் போராளிகளின் சந்திப்பொன்றில் இப்படிச் சீமான் கேட்கவும் ”இதையெல்லாம் தெரியாமல்தான் நாங்கள் முப்பது வருசமாகப் பிரபாகரனோட நிற்கிறமாக்கும்” என்றார் ஒரு புலித்தளபதி.

“சீமான் எங்களுக்கு எந்தப் புதுச் சாமானையும் காட்ட வேண்டியதில்லை” என்றார் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர். மற்றும்படி சீமான் சினிமாவுக்கும் ஒன்றும் செய்யவில்லை.

போராட்டத்துக்கும் ஒன்றும் பங்களிக்கவில்லை. விருந்தாளியாக வந்து அப்படியே திரும்பிச் சென்றார். போனவர் பிறகொருபோது சொன்னார், தான் ஈழத்தில் பாதிக்கப்பட்ட பெண் போராளி ஒருவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக. ஆனால், நடந்ததோ வேறு.

அப்படித்தான் பாரதிராஜாவின் வருகையும் எந்தப் பெறுமதிகளையும் வன்னிக்குக் கொடுக்கவில்லை. வன்னிக்கு மட்டுமல்ல, ஈழத்தமிழருக்கே கொடுக்கவில்லை என்றே சொல்ல வேணும்.

பாரதிராஜா கிளிநொச்சியில் திரைத்துறையில் ஈடுபட்டவர்களையும் கலைஞர்களையும் சந்தித்தார். கிளிநொச்சி திருநகரில்தான் சந்திப்பு நடந்தது.

அப்பொழுது, “மணிரத்தினத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தையும் கமல்ஹாசனின் “தெனாலி”யையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை இரண்டும் ஈழத்தமிழரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்றன.

ஈழ அரசியலும் ஈழ நிலவரமும் தெரியாமல் எடுக்கப்பட்ட படங்கள். இதைப்பற்றி உங்களுடைய நிலைப்பாடென்ன?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார் போராளிக்கலைஞர் ஒருவர்.

மடியிலேயே ஆட்லறி ஷெல் விழுந்து வெடித்தமாதிரி இருந்தது பாரதிராஜாவுக்கு. சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார் இரண்டு நிமிசத்துக்கும் மேல். பிறகு சொன்னார், “கமலும் மணியும் என்னுடைய நண்பர்கள். அவர்கள் நல்லவர்கள்” என்று.

“நல்லவர்கள் இப்படிச் செய்யலாமா?” என்று எழுந்தது மறு கேள்வி.

கையில் கட்டியிருந்த மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தார் இயக்குநர் சிகரம். நிலைமையைப் புரிந்து கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் “இத்துடன் நிகழ்ச்சியை முடிக்கப்போகிறோம். இயக்குநர் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது“ என்று மணிரத்தினத்தையும் கமலையும் பாதுகாத்த பாரதிராஜாவைப் பக்குவமாகக் காப்பாற்றிச் சென்றனர்.

ஆனால், எல்லோரும் தமிழ்நாட்டுக்குப் போன பிறகு வன்னிக்குப் போனோம். (ஏதோ தங்களின் செலவில், சுய முயற்சியில் போனதைப்போல) அங்கே புலிகளைச் சந்தித்தோம், பிரபாகரனைக் கண்டோம், பேசினோம் என்றெல்லாம் பேட்டி கொடுத்தனர்.

சிலர் வாரப்பத்திரிகைகளில் விறுவிறுப்பான தொடரே எழுதிக் காசு சம்பாதித்தனர். கூடவே பிரபாகரனோடும் புலிகளோடும் நின்ற படங்களையும் பிரசுரித்துப் புகழுயரத்தினர்.

இவர்களெல்லாம் புலிகளையும் பிரபாகரனையும் சந்தித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்தப் பத்தாண்டு காலத்தில் ஒரு படத்தையாவது ஈழப்பிரச்சினையை வைத்து உருப்படியாக எடுத்தார்களா? அல்லது ஈழச்சினிமா முயற்சிகளுக்கும் பிற கலைத்துறை மேம்பாட்டுக்கும் எப்போதாவது உதவியிருக்கிறார்களா?

ஆனால், மேடைக்கு மேடை, வார்த்தைக்கு வார்த்தை புலி என்றும் பிரபாகரன் எனவும் சொல்லியே பொழுதைப் போக்குகிறார்கள். இப்பொழுது புதிய பிரபாகரனையே “இயக்குநர் சிகரம்” உருவாக்கி விட்டார்.

சினிமாவில் சில பாத்திரங்களை உருவாக்குவது உண்டு. அவை வெறும் பிம்பங்களே. நிஜமல்ல. நிஜம் போலத்தோன்றும் பாத்திரங்கள். பாரதிராஜா தன்னுடைய சினிமாவில் மறக்க முடியாத பல பாத்திரங்களை உருவாக்கியவர்.

ஆனால், சீமானை வைத்து எதை உருவாக்கப்போகிறார்? என்னமாதிரியான பிம்பத்தை? அல்லது எத்தகைய பாத்திரத்தை?

எல்லாவற்றுக்கும் அப்பால் புலிகளும் பிரபாகரனும் இப்போது யாரும் எப்படியும் (ஊறுகாய்போல) பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாகி விட்டதா? முள்ளிவாய்க்கால் அவலத்தையும் விட இந்த அவலம் புலிகளுக்குப் பெரிதே.

– கருணாகரன்-