மாணவியைக் குடைபிடிக்கச் சொன்ன ஆசிரியை – அரக்கோணத்தில் நடந்த அவலம்!

அரக்கோணம் அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 1.30 மணி நேரத்துக்கும் மேலாக மாணவியைக் குடை பிடிக்க வைத்த ஆசிரியர்கள்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

இப்போட்டியில் பல்வேறு தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்று வந்த போட்டிகளில் மதியம் 12 மணியளவில் நடைபெற்ற கோக்கோ போட்டியைப் பார்வையிட்ட 2 ஆசிரியர்கள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சுமார் 1.30 மணி நேரத்துக்கும் மேலாகக் குடைபிடிக்க வைத்துள்ளனர்.

போட்டி முடிந்த பிறகும் அந்த மாணவியைக் குடைபிடிக்க வைத்துவிட்டு ஆசிரியர்கள் பேசி சிரித்துக்கொண்டு உள்ளனர். இந்தச் செயல் பெற்றோர்களின் மத்தியில் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதில் என்ன ஒரு கொடுமை என்றால், குடை பிடிக்கும் மாணவி அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர். குடை பிடிக்கச் சொன்ன ஆசிரியர்கள் தனியர் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆசிரியர்களின் செயலை பார்த்து பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறனர். அரசு பள்ளி மாணவ மாணவிகள் என்றால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குகூட இளக்காரமாகப் போச்சா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் கேட்டபோது, ”மாணவியைக் குடை பிடிக்க வைத்த ஆசிரியர்கள், அரக்கோணத்தில் உள்ள 2 தனியார் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

இது குறித்து அரக்கோணம் DEO விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பிலிருந்து அறிக்கையும் கேட்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ஆனால், இதுவரைக்கும் விசாரணையாகவே உள்ளது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.