கொழும்பில் கடும் பதற்றம்! நடந்தது என்ன?

இலங்கையின் மேற்கே கொழும்பு கோட்டை தொடரருந்து நிலையத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

தொடருந்து நிலையத்தில் இன்று முன்னிரவு நிலவிய அமைதியற்ற நிலை காரணமாகவே மேலதிக பாதுகாப்பிற்காக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடருந்தில் பயணிக்கவந்த மக்கள், பணியாளர்களின் திடீர் போரட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டை தொடருந்து நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

குறிப்பாக சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி தொடருந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் ஆகியோர் இன்று பிற்பகல் 3.00 மணியிலிருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் தூர இடங்களுக்குச் செல்வதற்காக தொடருந்து நிலையத்திற்கு வந்த மக்கள் கடும் கோபமடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக தொடருந்து நிலையத்தில் பதற்ற நிலை காணப்பட்டதுடன் வீதிகளிலும் கடும் வாகன நெரிசல் நிலவியது.

இதனையடுத்தே நிலைமையினைச் சீர்செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் கோட்டையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தொடருந்து பருவசீட்டை கொண்டுள்ள பயணிகள் அரச பேருந்துக்களில் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளதுடன் வீதி அனுமதி பத்திரமின்றி எந்தவொரு வீதியிலும் தனியார் பேருந்துகளுக்கு பயணிக்க முடியும் என நிதியமைச்சும் அறிவித்துள்ளது.