யாழில் ஆரம்பித்தது புதிய கட்சி: சின்னம் சாராயப் போத்தல்?

ரெலோ அமைப்பிலிருந்து விலகிய கணேஷ் வேலாயுதத்தின் புதிய கட்சியின் பெயர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் முற்போக்கு முன்னணி (people progressive front) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் முதலாவது கலந்துரையாடல் நாளை காலை 10 மணிக்கு கிறீன் கிராஸ் விடுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பிற்கு அழைக்கப்பட்ட பலரிற்கு சந்திப்பிடம் தொடர்பாக தகவல் வழங்கப்படவில்லை. நாளை காலையில் சந்திப்பிற்கு சற்று முன்னராக இடம் குறித்த தகவல் வழங்கப்படும் என்றுதான் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டவர்களிற்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெலோவிலிருந்து கணேஷ் வேலாயுதம் வெளியேறியது, செயலாளர் நாயகத்திற்கு அது குறித்த கடிதம் அனுப்பியது போன்ற விடயங்களை முதலில் நாம் தகவல் வெளியிட்டிருந்தது.

கணேஷ் வேலாயுதத்தின் புதிய கட்சி தொடர்பான தகவல்களையும் எமது வாசகர்களிற்காக வெளியிடுகிறோம்.

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரும், சிவாஜிலிங்கத்தின் முன்னை நாள் வலதுகையுமான சதீஷ் தற்போது, ரெலோவிலிருந்து விலகியுள்ளார். அவர்தான் கணேஷ் வேலாயுதத்தின் வலதுகையாக இப்பொழுது செயற்படுகிறார்.

கடந்த இரண்டு வாரமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரமுகர்களையும் கணேஷ் வேலாயுதம் சந்தித்து வந்தார். பேராசிரியர் சிவச்சந்திரன், பேராசிரியர் சண்முகலிங்கன், பேராசிரியர் சிற்றம்பலம், பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட கல்விப்புலத்தை சார்ந்தவர்களையும் சந்தித்து பேசினார்.

இது தவிர, வேறு பல சந்திப்புக்கள் யாழ்ப்பாணம் கிறீன்கிராஸ் விடுதியில் இரவுவேளைகளில் நடந்தன. அனைத்து சந்திப்புக்களும் மதுபான விருந்துடன்தான் நடந்துள்ளன. பின்மாலை பொழுதில் மது அருந்த சந்திக்கிறார்களா, கட்சி ஆரம்பிக்க சந்திக்கிறார்களா என்ற சந்தேகம் தமக்கிருப்பதாக, சந்திப்பில் கலந்துகொண்ட சில பிரமுகர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

நாளையை சந்திப்பில் கட்சிக்காக சில புதிய, பிரபல முகங்களையும் கலந்துகொள்ள வைக்க கணேஷ் வேலாயுதம் தரப்பு முயற்சித்தபடியிருக்கிறது.

மது விருந்துகளுடன் கட்சி தொடர்பான கலந்துரையாடல்கள் நடப்பதால், கட்சி சின்னமாக மதுபான போத்தலை தெரிவுசெய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென்று அரசியல் வட்டாரங்களில் நகைச்சுவையாக கதைக்கப்பட்டு வருகிறது.