சாள்ஸ் அன்ரனியின் கட்டளையால் கோபப்பட்ட பிரபாகரன்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 08

பீஷ்மர்

சாள்ஸ் அன்ரனி இராணுவ கட்டமைப்பில் கீழிருந்து வளர்ந்தவர் அல்ல. களசெயற்பாட்டிலும் கீழ் மட்டத்திலிருந்து வளர்ந்தவர் அல்ல. அமைப்பின் தலைவரின் மகன் என்ற சாதகம் அவரை உச்சத்தில் அமர வைத்திருந்தது. இராணுவ படிநிலையில் கீழிருந்து மேலெழாதது சாள்ஸ் அன்ரனியின் மிகப்பெரிய பலவீனமாக இருந்தது.

திடீரென இயக்கத்திற்குள் நுழைந்து, கண்ணிமைக்கும் பொழுதுக்குள்ளேயே எல்லா தளபதிகளையும் கட்டுப்படுத்துபவராக அவர் மேலெழுந்தது, சில அதிருப்திகளையும் கிளப்பாமல் இல்லை. நாம் சொல்லும் இந்த தகவல்கள், மேலோட்டமாக புலிகளை கவனிப்பவர்களிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. உண்மையை சொன்னால், விடுதலைப்புலிகள் அமைப்பு இயங்குநிலையில் இருந்தபோது, அமைப்பின் மேல்நிலை உறுப்பினர்கள் மத்தியில் மட்டும் உணரப்பட்ட விசயம் இது. அப்பொழுது யாரும் இதைப்பற்றி வாய் திறந்து இன்னொருவருடன் பேசமாட்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் சில மேல்நிலை உறுப்பினர்கள் இதை மெல்ல மெல்ல பேசுகிறார்கள்.

இரண்டாவது- இந்த பாகத்தின் ஆரம்பத்தில் புலிகளின் மேல்நிலை உறுப்பினர்கள் சிலர் மட்டுமே அறிந்த விசயம் என்றோம். புலிகளின் மேல்நிலை உறுப்பினர்கள் எல்லோருமே இறந்துவிட்டார்களே, வேறு யார் இப்பொழுது இருப்பார்கள் என நீங்கள் சந்தேகப்படலாம்.

இந்த சந்தேகத்தையும் தீர்த்துவிடலாம். புலிகளின் கட்டமைப்பை சரியாக புரிந்துகொண்டவர்களிற்கு இனி நாம் சொல்லப்போவது நன்றாக தெரியும். புலிகளின் மையம் எனப்படுவது பிரபாகரன் மற்றும் அவரை நெருக்கமாக சுற்றியுள்ள போராளிகள்தான். அதற்காக மற்ற தளபதிகள் டம்மிகள் என்பதல்ல. அவர்களிடம் நிர்வாகம், களத்தை வழிநடத்தல் முதலான பொறுப்புக்கள் இருந்தன. அமைப்பு ரீதியாக முடிவெடுக்கும் பிரபாகரனை சுற்றியிருந்தவர்களிடம் வேறுவிதமான முக்கியத்துவம் இருந்தது. யுத்தத்தின் இறுதியில் புலிகளின் நிர்வாகங்கள் சீர்குலைய, இந்த தளபதிகள் எல்லோருமே முக்கியமிழக்க, முடிவெடுக்கும் நிலையிலிருந்த பிரபாகரனை சுற்றியிருந்தவர்களிடம் மட்டுமே அனைத்து விடயங்களையும் கையாளும் பொறுப்பு வந்தது. இப்பொழுது இதை புரிந்துகொள்ள பலருக்கு சிரமமாக இருந்தாலும், தொடரை படித்துக் கொண்டு போக அது புரியும்.

தளபதி பானு

இப்பொழுது ஏன் அதை குறிப்பிட்டோம் என்றால், இந்த விசயங்களை சாதாரண போராளிகள், புலிகள் அமைப்பின் பணியாளர்கள், ஆதரவாளர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. மொத்தத்தில், புலிகள் பற்றிய மிக ஆழமான தொடராக இதுதான் இருக்குமென நினைக்கிறோம்.

சரி, இனி விடயத்துக்கு வருகிறோம்.

சாள்ஸ் அன்ரனியின் வயது, அனுபவத்தை மீறிய பொறுப்புக்கள் குவிந்தது. 2006 இன் பின்னர் புலிகள் அமைப்பிற்குள் ஆளணி, வளம் அதிகமுள்ள பிரிவாக கணினி பிரிவு மாற்றமடைந்தது.

1970களின் தொடக்கத்தில் பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியபோது அவர்தான் மிக இளையவர். மற்றையவர்கள் எல்லோரும் அவரை தம்பி என்றழைத்தனர். ஆனால் அவரை புலிகள் அமைப்பிற்குள் தம்பி என்றழைத்தவர்கள் குறைவு. அதுவும் பிற்காலத்தில் பாலசிங்கம் போன்ற வெகுசிலர்தான் அப்படி அழைத்தனர். அவர் எல்லோருக்கும் அண்ணை ஆனார். 1970களில் பிரபாகரனிற்கு நடந்தது 2000களில் சாள்ஸ் அன்ரனிக்கு நடந்தது. அவரை தளபதிகள் தம்பி என அழைத்தனர்.

சாள்ஸ் அன்ரனி அமைப்பின் தலைமையை நோக்கி நகர தொடங்க, சில தளபதிகளிற்கு அது அதிருப்தியை கொடுத்ததென கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதில் முதன்மையானவர் சூசை. அதேபோல, சாள்ஸ் அன்ரனியுடன் நெருக்கமான ஒரு அணியும் உருவாகியது. அதில் தளபதிகள் பானு, வேலவன், பாண்டியன் வாணிப பொறுப்பாளர் குட்டி போன்றவர்கள் முக்கியமானவர்கள். இதில் பானுவிற்கும், சாள்ஸ் அன்ரனிக்குமிடையில் மிகமிக நெருக்கமிருந்தது. சாள்ஸ் அன்ரனி என்ன முடிவெடுத்தாலும், அது சரியென முதலாவது ஆளாக பானு ஆமோதிப்பார்.

இதற்கு ஒரு உதாரணம்.

புதுக்குடியிருப்பிற்கு நெருக்கமாக இராணுவம் நிலை கொண்டிருந்த 2009 இன் ஜனவரி மத்திய பகுதி. யுத்தத்தை தொடர புலிகளிற்கு ஆளணிப்பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக இருந்தது. கட்டாய ஆட்சேர்ப்பு உபாயம் வெற்றியளிக்கவில்லை. அப்படி இணைக்கப்பட்டவர்கள் தப்பியோடி விடுகிறார்கள். அப்பொழுது ஒருநாள் தளபதிகள் இரணைப்பாலையில் சந்தித்து கொண்டார்கள். ஆளணி பிரச்சனையை சரி செய்ய, தப்பியோடுவதை தடுக்க என்ன செய்யலாமென்பதையே அன்று ஆராய்ந்தார்கள். பெண்கள் தப்பியோடுவதை தவிர்க்க, படைக்கு இணைக்கப்படும் பெண்கள் அனைவருக்கும் ஒரு இஞ்ச் அளவில் (பொலிஸ் குறோப்) முடிவெட்டலாமென சாள்ஸ் அன்ரனி சொன்னார். மகளிர் படையணி தளபதிகளான விதுஷா, துர்க்கா ஆகியோர் இதனை கடுமையாக எதிர்த்தனர். தமிழ் பெண்களின் வாழ்வில் தலைமுடி செலுத்தும் உணர்வுபூர்வமான பாத்திரம் பற்றி இருவரும் கூறி, பெண்களின் விருப்பமின்றி அப்படி வெட்ட முடியாதென எதிர்ப்பு தெரிவித்தனர்.

தளபதிகள் விதுஷா, துர்க்கா
தளபதிகள் விதுஷா, துர்க்கா

அப்பொழுது சாள்ஸ் அன்ரனிக்கு சார்பாக நிலைப்பாடெடுத்த ஒரே தளபதி பானு. இறுதியில் சாள்ஸ் அனிரனியின் யோசனையே தீர்மானமாக்கப்பட்டது.

இந்தவகையான கூட்டங்கள் பல தளபதிகளை எரிச்சலடைய வைக்கவும் செய்தது. அது பற்றிய தகவல்களை இந்த தொடரின் பின்பகுதிகளில் குறிப்பிடுகிறோம்.

2006 இல் யுத்தம் ஆரம்பித்த பின் புலிகளின் தாக்குதல் முயற்சிகள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியடையவில்லையென்பதே உண்மை. இது தளபதிகளை செய்வதறியாது திணற செய்தது.

2009இன் ஆரம்பத்தில் விசுவமடுவிற்கும் அம்பகாமத்திற்கும் இடைப்பட்ட காட்டு பிரதேசத்தில் புலிகள் இராணுவத்தின் மீது ஒரு வலிந்த தாக்குதல் மேற்கொண்டனர். 2006 இன் பின் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவம் சில அடிகளாவது பின்னால் சென்ற சம்பவங்கள் ஓரிரண்டுதான். அதில் அம்பகாம தாக்குதலும் ஒன்று. அதில் சாள்ஸ் அனிரனி முக்கிய பங்கு வகித்திருந்தார். (இந்த தாக்குதல் தொடர்பாக பின்னர் விரிவாக பார்க்கலாம்)

இந்த தாக்குதலின் பின்னர் தளபதிகளுடனான சந்திப்பொன்றில் வேலவன் பேசும்போது – “நாங்கள் பெரியாட்கள் இருந்து என்ன செய்யிறம். ஒன்றுமில்லை. அவன் (சாள்ஸ் அனிரனி) சின்னப்பொடியன். ஒரு சண்டை செய்து காட்டியிருக்கிறான். இனியாவது நாங்கள் சண்டையொன்று செய்து காட்ட வேணும்“ என்றுள்ளார். சாள்ஸ் அன்ரனிக்கு கிடைப்பதைபோல வளங்களை ஒருங்கிணைத்து தருவீர்களா என மற்றைய தளபதிகள் சூடாக கேட்க, அன்றைய சந்திப்பில் அனல் பறந்தது.

சாள்ஸ் அன்ரனியின் தலைமைத்துவம், அவருக்கு கிடைத்த திடீர் முக்கியத்துவம் தொடர்பாக வெளிப்படையான அதிருப்தியை பதிவு செய்தவர் சூசை. அதற்கு காரணம், கடற்புலிகளிற்குள்ளும் சாள்ஸ் அன்ரனி மூக்கை நுழைக்க ஆரம்பித்ததே. கணினி பிரிவென ஆரம்பிக்கப்பட்ட பிரிவில், மற்றைய அனைத்து பிரிவுகளின் வேலைகளும் உள்ளடக்கப்பட்டன. தாக்குதலணி இருந்தது. பொறியியல் பிரிவிருந்தது. மருத்துவமிருந்தது. கனரக ஆயுதப்பிரிவிருந்தது. கடற்புலிகள் மட்டுமிருக்கவில்லை.

கடற்புலிகளை போல தனியான கடற்கட்டமைப்பொன்றை கணினி பிரிவின் கீழ் உருவாக்க சாள்ஸ் அன்ரனி முயன்றார். சுண்டிக்குளத்தில் கணினி பிரிவின் கண்காணிப்பில் ஒரு கடல் அணி உருவாக்கப்பட்டது. அவர்கள் தாக்குதல், கடல்வழி ஆயுத விநியோக நடவடிக்கைகளை கையாள முயற்சித்து கொண்டிருந்தார்கள். கடற்புலிகளின் நடவடிக்கைகளும், கணினி பிரிவின் நடவடிக்கைகளும் ஒன்றையொன்று இடைவெட்ட முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளன.

கணினி பிரிவின் அபரிமித வளர்ச்சி, அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் சூசைக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. சாள்ஸ் அன்ரனியின் முடிவுகள் நன்றாக அமையாத பட்சத்தில் மற்றைய தளபதிகள் மௌனமாக இருந்தாலும், சூசை பகிரங்கமாக அதனை குறிப்பிடுபவராக இருந்தார். ஒருநாள் ஆத்திரம் மிகுதியில் “அப்பா உருவாக்கினதெல்லாவற்றையும் அழிக்கவா வந்தனி“ என திட்டியிருந்தார்.

சூசையின் கோபம், அதிருப்தி எதுவும் சாள்ஸ் அன்ரனியின் அபரிமித வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவில்லை. ஏனெனில் சாள்ஸ் அன்ரனியிடமே இயக்கத்தை ஒப்படைக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருந்திருக்க வேண்டும். பொட்டம்மானை தவிர்த்து, சாள்ஸ் அன்ரனியிடம் தலைமையை ஒப்படைத்தாலும் பொட்டம்மான் அதிருப்தி கொள்ளமாட்டார் என்பதை பிரபாகரன் அறிந்திருந்தார். பிரபாகரன் மற்றும் இயக்கத்தில் பொட்டம்மானின் விசுவாசம் அப்படி.

பிரபாகரன்- சூசை (ஆரம்பகால படம்)
பிரபாகரன்- சூசை (ஆரம்பகால படம்)

ஆனால் சாள்ஸ் அன்ரனியின் அனுபவமின்மைதான் சிக்கலாக இருந்தது. மேலே குறிப்பிட்டிருந்த அம்பகாம- விசுவமடு காட்டு பகுதி தாக்குதல் சாள்ஸ் அன்ரனியை முன்னிறுத்தி பல தளபதிகளின் பங்களிப்புடன் நடந்தது. சாள்ஸ் அன்ரனிதான் ஒருங்கிணைப்பாளர். விடிகாலையில் தாக்குதல் ஆரம்பிக்க திட்டதிடப்பட்டபோதும், அது காலை நன்றாக விடிந்த பின்னரே ஆரம்பித்தது. சரியான ஒழுங்கமைப்பு இருக்கவில்லை.

அதுவரையான தாக்குதல்களில் இராணுவம் பின்வாங்கியே இருக்காத நிலையில், இந்த தாக்குதலில் மட்டும் சிறிது பின்வாங்கினார்கள். பின்னர் சுதாகரித்து கொண்டு புலிகளின் அணியொன்றை சுற்றிவளைத்துவிட்டனர். அப்போது கட்டளை மையத்தில் சாள்ஸ் அன்ரனி உட்கார்ந்திருந்தார்.

அந்த முற்றுகையை கடுமையான எறிகணை தாக்குதல் மூலம் முறியடிக்க பிரபாகரன் ஆலோசனை கொடுத்தார். அதனை சாள்ஸ் அன்ரனி சரிவர செய்ய முடியவில்லை. தூய தமிழில் கட்டளைகளை கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்தாரே தவிர, தாக்குதலால் எதிரி திண்டாட வேண்டுமென நினைக்கவில்லை.

தொலைத்தொடர்பு கருவியில் சாள்ஸ் அன்ரனியின் கட்டளையை கேட்டுக்கொண்டிருந்த பிரபாகரனிற்கு எரிச்சல்தான் வந்தது.

(தொடரும்)

நன்றி : தமிழ்பக்கம்