சாவுத்தண்டனை- வண்புணர்வுக் குற்றங்களைத் தடுக்குமா?

நாட்­டையே உலுக்கிவிட்ட பாலி­யல் வன்­பு­ணர்­வுச் சம்­ப­வங்­க­ளைத் தொடர்ந்து, 12வய­துக்­குட்­பட்ட சிறு­மி­க­ளைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ப­வர்­க­ளுக்கு அதி­க­பட்ச தண்­ட­னை­யா­கச் சாவுத் தண்­ட­னையை விதிக்­கும் வகை­யி­லான சட்­டத் திருத்­தம் இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்டு, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் நலத்­துறை அமைச்­ச­ரான மேனகா காந்தி, இந்தச் சட்­டம் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களைத் தடுக்­கும் என்று தான் நம்­பு­கிறார் எனக் கூறி­னார்.

கடந்த 2013ஆம் ஆண்டு, டெல்­லி­யில், ஓடும் பஸ்­சில், ஜோதி என்ற இளம்­பெண் கூட்டுப் பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு ஆளா­ன­தைத் தொடர்ந்து, பெண்­களைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ப­வர்­க­ளுக்­குச் சாவுத் தண்­டனை விதிக்­கும் முடிவை இந்­திய மத்­திய அரசு கொண்­டு­வந்­தது.

தென் கிழக்கு ஆசி­யா­வில் பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ், ஆப்­கா­னிஸ்­தான் ஆகிய நாடு­களைத் தொடர்ந்து நான்­கா­வது நாடாக இந்­தி­யா­வில் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ப­வர்­க­ளுக்­குத் தூக்­குத் தண்­டனை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால், இந்த நட­வ­டிக்கை பாலி­யல் வன்­பு­ணர்வுச் சம்­ப­வங்­களைக் குறைக்­குமா? குறைக்­காதா? என்ற வேறு­பட்ட கருத்­துக்­கள் எழுந்­துள்­ளன.

சட்­டங்­களை ஏலவே கொண்­டுள்ள நாடு­கள்
ஆப்­கா­னிஸ்­தான் – –பெண்­க­ளைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ரா­க 2009ஆம் ஆண்டு வரை ஆப்­கா­னிஸ்­தா­னில் ஒரு குற்­ற­வி­யல் சட்­டம் கூட நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 2009ஆம் ஆண்டு பெண்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறைத் தடுப்பு சட்­டம் அந்த நாட்டு அதி­ப­ரின் உத்தரவின் மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது.

பெண்­கள் அல்­லது சிறு­மி­கள் பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு ஆளாகி இறந்­தால், அந்­தச் செய­லைப் புரிந்­த­வ­ருக்­குச் சாவுத் தண்­டனை விதிப்­ப­தற்கு அந்தச் சட்­டம் வழி­கோ­லி­யது. பாலி­யல் வன்­பு­ணர்­வுச் சம்­ப­வங்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்குச் சாவுத் தண்­டனை அளிக்­கும் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்ட பிற­கும்­கூட ஆப்­கா­னிஸ்­தா­னில் பாலி­யல் வன்­பு­ணர்­வுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை சீராக அதி­க­ரித்­தது. ஆப்­கா­னிஸ்­தா­னில் சாவுத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­வது பர­வ­லாக இல்லை.

அவ்­வப்­போது தனது விதி­க­ளின்­படி தவறு செய்­த­வர்­க­ளைப் பொது­வெ­ளி­யில் தூக்­கி­லிட்ட தாலி­பன் அமைப்பு, ஆப்­கா­னிஸ்­தானில் 2001ஆம் ஆண்டு வீழ்ந்த பிறகு, அந்த நாட்டு அரசு ஒரு­சில வரு­டங்­க­ளுக்கு ஒரு­மு­றையே தூக்­குத்­தண்­ட­ னையை நிறை­வேற்றி வரு­கி­றது. ஆனால், ஒவ்­வொரு தூக்­குத்­தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்­கும் அந்த நாட்­டின் அதி­பர் தனித்­த­னியே கையெ­ழுத்­திட வேண்­டும். ஆப்­கா­னிஸ்­தா­னில் 2009ஆம் ஆண்டு முதல் இது­வரை 36 சாவுத் தண்­ட­னை­கள் நிறை­வேற்­றப்­பட்டுள்­ள­தாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.
ஆனால், அவற்­றுள் எத்­தனை தண்டனைகள் பாலி­யல் வன்­பு­ணர்வில் ஈடுபட்டவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன என்­பது தெரி­ய­வில்லை.

ஆப்­கா­னிஸ்­தா­னில் 2014ஆம் ஆண்டு சில பெண்­க­ளைக் கூட்­டாகப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்த ஐந்து ஆண்­க­ளுக்கு அப்­போ­தைய அதி­பர் கர்­சாய், இரண்டு மணி­நேர துரித விசா­ர­ணைக்கு பிறகு, சாவுத் தண்­டனை விதிப்­ப­தற்கு ஒப்­பு­தல் தெரி­வித்­துக் கையெ­ழுத்­திட்­டார்.

பாகிஸ்­தான் ––பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ப­வர்­க­ளுக்கு தெற்கு ஆசி­யா­வி­லேயே சாவுத் தண்­டனை விதித்த முதல் நாடு பாகிஸ்­தான். 1979ஆம் ஆண்டு அப்­போ­தைய இரா­ணு­வத் தள­ப­தி­யா­க­வும், நாட்­டின் ஆறா­வது அதி­ப­ரா­க­வும் விளங்­கிய ஜியா உல் ஹக், முறை தவ­றிய பாலி­யல் உறவு கொள்­ப­வர்­கள் மற்­றும் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ப­வர்­க­ளைக் கல்லைக் கொண்டு அடித்தே கொல்­லும் தண்­ட­னை­யைக் கொண்­டு­வந்­தார்.

ஆனால், பாலி­யல் வன்­பு­ணர்­வு­க­ளால் பாதிக்­கப்­ப­டும் பெண்­கள் மற்­றும் சிறு­மி­கள் தங்­கள் பாதிக்­கப்­பட்­ட­தற்குச் சாட்­சி­யாக நான்கு ஆண்­களை நிறுத்­த­ வேண்­டும் என்ற விதி இருந்­த­தால், இந்­தச் சட்­டம் அடக்கு முறை­யா­கப் பார்க்­கப்­பட்­டது. 2006ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பெண்­கள் பாது­காப்­புச் சட்­டத்­தின் மூலம் அந்தச் சட்­டம் திருத்­தி­ய­மைக்­கப்­பட்­டது. இந்தச் சட்­டத் திருத்­தத்­தின்­படி, பெண்­கள், சிறு­மி­கள், கூட்டுப் பாலி­யல் வன்­பு­ணர்வு மற்­றும் 16வய­துக்­குட்­பட்ட சிறு­மி­ களைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ப­வர்­க­ளுக்­குச் சாவுத் தண்­டனை விதிக்­கும் சட்­டம், பாகிஸ்­தான் தண்­ட­னைச் சட்­டத்­தின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

12 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­ப­வர்­க­ளுக்­குச் சாவுத் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வரை பார்க்­கும்­போது பாகிஸ்­தா­னில் பாலி­யல் வன்­பு­ணர்வுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 10 மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. சாவுத் தண்­ட­னைக்கு எதி­ராக எழுந்த பன்­னாட்டு அழுத்­தங்­க­ளால் 2008-முதல் 2014 வரையான காலத்­தில் பாகிஸ்­தா­னில் சாவுத் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வது நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

பங்­க­ளா­தேஷ்– பாலி­யல் வன்­பு­ணர்வு, கூட்டுப் பாலி­யல் வன்­பு­ணர்வு, பெண்கள் மீதான அமி­லத் தாக்­கு­தல்­கள் மற்­றும் குழந்­தைக் கடத்­தல் போன்ற குற்­றங்­க­ளுக்குச் சாவுத் தண்­டனை உட்­படக் கடு­மை­யான தண்­ட­னை­கள் வழங்­க­வேண்­டும் என்­ப­தற்­காக 1995ஆம் ஆண்­டில் பெண்­கள் மற்­றும் குழந்­தை­களுக்கு எதி­ரான ஒடுக்­கு­முறை (சிறப்பு விதி­கள்) சட்­டத்தை பங்­க­ள­தேஷ் நாடா­ளு­மன்­றம் கொண்­டு­வந்­தது.

ஆனால் இந்தக் கடுமையான தண்­ட­னை­கள் குறித்துப் பல விமர்­ச­னங்­கள் எழுந்­தன. போதிய ஆதா­ரங்­கள் மற்­றும் குறைந்­த­பட்ச தண்­ட­னை­கூட இல்­லாத கார­ணத்­தால் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளில் பல­ரும் சுதந்­தி­ர­மா­கத் திரிந்­த­னர்.
2000 ஆம் ஆண்­டில் இந்த சட்­டம் அகற்­றப்­பட்டு, பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் சட்­டத்துக்கு எதி­ரான ஒடுக்­கு­முறைத் தடுப்புச் சட்­டத்­தின் கீழ் மாற்­றப்­பட்­டது. இதில் பெண்­கள் அல்­லது குழந்­தை­கள் வன்­பு­ணர்வு வழக்­கில் சாவுத் தண்­டனை வழங்­கும் அம்­சம் மட்­டும் மாற்­றப்­ப­ட­வில்லை.

ஆயுள் தண்­டனை மற்­றும் பிற குற்­றங்­க­ளுக்கு குற்றப்பணம் விதிக்­கப்­ப­டும் என்பதும் இந்தச்­சட்­டத்­து­டன் இணைக்­கப்­பட்­டது. 24 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சாவுத் தண்­டனை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தி­லி­ருந்து இங்கு பதி­வான வன்­பு­ணர்வு வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை குறை­ய­வில்லை.
‘’வன்­பு­ணர்வு செய்­தால் சாவுத் தண்­டனை விதிக்­கப்­ப­ டும் என்ற பயத்தை மக்­கள் மன­தில் கொண்­டு­வந்த எந்­தச் சான்­றும் இல்லை. வன்­பு­ணர்வு வழக்­கு­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறை­ய­வில்லை,’’ என்­கி­றார் மனித உரிமை ஆர்­வ­ல­ரான சுல்­தானா கமல்.

கடந்த பத்து ஆண்­டு­க­ளில் பங்களாதேஷில் ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட சாவுத் தண்­ட­னை­கள் நிறை ­வேற்­றப்­பட்­டுள்ளதாக சாவுத் தண்­டனை மீதான உல­க­ளா­விய தர­வு­களை சேக­ரித்­து­வ­ரும் பன்னாட்டு மன்னிப்புச் சபை கூறு­கி­றது. ஆனால், இவற்­றில் வன்­பு­ணர்வு வழக்­கில் எத்­தனை சாவுத் தண்­ட­னை­கள் நிறை­வேற்­றப்­பட்­டன என்­பது பற்­றிய தக­வல்­கள் எது­வும் கிடைக்­க­வில்லை.

பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் ஊதா­சீ­னப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள்

தெற்­கா­சிய நாடு­க­ளில் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­யப்பட்­ட­வர்­கள் சமூகக் களங்­க­மாகக் கரு­தப்­ப­டு­வ­தால், பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தங்­க­ளு­டைய பாதிப்பை பெரும்­பா­லும் வெளிப்­ப­டை­யா­கச் சொல்­வ­தில்லை. மனித உரிமைகள் கண் காணிப்பகம் என்ற அமைப்பு 2012ஆம் ஆண்டு வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி, பாலி­யல் வன்­பு­ணர்வு பற்­றிப் பெண்­கள் முறைப்­பாடு செய்­தால், தகாத உறவு என்ற குற்­றச்­சாட்­டில் அவர்­கள் கைது செய்­யப்­ப­ட­லாம் அல்­லது கட்­டா­யத் திரு­ம­ணம் செய்து வைக்­கப்­ப­ட­லாம்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குப் பொலிஸ், நீதி அமைப்­பு­கள் மற்­றும் அரசு அதி­கா­ரி­கள் ஆத­ரவு கொடுப்­ப­தற்­குப் பதி­லாக, தவ­றாக நடத்­தப்­ப­டு­கி­றார்­கள். பாதிக்­கப்­பட்ட பெண்­கள் பெரும்­பா­லும் அக்­க­றை­யில்­லா­மல் ஏள­னத்­து­டன் நடத்­தப்­ப­டு­வ­து­டன், தார்­மீக நெறி­மு­றை­களை மீறி­த் தண்­டிக்­கப்­ப­டு­கின்றனர் என அந்த அறிக்கை கூறு­கி­றது. பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை தொடர்­பாகப் பொலிஸ் மற்­றும் பிற அதி­கா­ரி­க­ளின் பொறுப்­பு­களை அதி­க­ரிக்­கும் வகை­யில் இந்­தி­யா­வில் சட்­டத் திருத்­தம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் மாற்­றம் என்­பது மிக­வும் மெது­வா­கவே உள்­ளது. இந்­தி­யா­வில் வன்­பு­ணர்­வுச் சம்­ப­வங்­க­ளுக்­கும் பொலி­சா­ரி­டம் முறைப்­பா­டு­கள் அளிப்­ப­தற்­கு­மான இடை­வெளி மிக­வும் அதி­க­மாக இருப்­ப­தாக ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

சாவுத் தண்டனை­யால் குற்­றத்­தைக் குறைக்க முடி­யாது
சாவுத் தண்­டனை மட்­டுமே வன்­பு­ணர்­வுக் குற்­றங்­களை குறைப்­ப­தற்கு உத­வாது என்று ஆப்­கா­னிஸ்­தான் தனி­ ந­பர் மனித உரி­மை­கள் ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் மூஸா மஹ்­மூடி கூறு­கி­றார். பாலி­யல் வன்­பு­ணர்வு என்­பது ஏற்றுக்கொள்ள முடியாத குற்­றம் என்­றா­லும், நடை­மு­றை­யில் சம­ர­சங்­கள் சாத்­தி­ய­மா­கின்­றன. பாலி­யல் வன்­பு­ணர்­வுக்­குச் சாவுத் தண்­டனை விதிப்­ப­தற்கு எதி­ரா­கக் குரல் கொடுக்­கின்ற பல இந்­தியச் செயற்­பாட்­டா­ளர்­களும் இந்­தக் கவ­லையை எழுப்­பு­கின்­ற­னர். ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் சட்­டத்­தி­ருத்­தங்­கள் செய்­யப்­பட்ட போதி­லும், பெண்­கள் மற்­றும் சிறார்­கள் மீதான பாலி­யல் வன்­கொ­டுமைக் குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை மாறா­மல் தொடர்­கின்­றன.

தண்­டனை வழங்­கப்­ப­டும் விகி­தம் குறை­வாக இருப்­ப­தால், ஏற்­க­னவே இருக்­கும் சட்­டத்­தில் திருத்­தங்­கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. காவல்­துறை அதி­காரி அல்­லது அரசு அதி­காரி ஒரு­வர் பாலி­யல் குற்­றத்­தில் ஈடு­பட்­டால், அது குறித்து உரிய விசா­ரணை செய்­வது, இரண்டு தரப்­பி­ன­ருக்­கும் மர­பணுப் பரி­சோ­த­னை­களை முறை­யாக மேற்­கொள்­வது, பாதிக்­கப்பட்ட­வ­ரின் அடை­யா­ளத்தை மறைப்­பது, விசா­ர­ணையை விரை­வில் முடிப்­ப­து­போன்ற சாத்­தி­யங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் இந்­தி­யா­வில் ஏற்­க­னவே இருக்­கும் அனு­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்தச் சட்­டங்­கள் உறு­தி­யாக, நன்கு திட்­ட­மி­டப்­பட்டுச் செவ்­வனே செயல்­ப­டுத்­தப்­ப­டுமா? என்­பது கவ­லைக்­கு­ரிய விடய­மா­கவே உள்­ளது.

நீதி­யின் மெத்­த­னப்­போக்கு
வழக்கை நடத்­தும்­போது ஏற்­ப­டும் அதிக செல­வு­கள், தாம­த­மான விசா­ரணை நடை­மு­றை­கள் என நீளும் சிக்­கல்­க­ளைத் தவிர, பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் பிறப்­பு­றுப்­பில் இரண்டு விரல்­களை உட்­செ­லுத்­திப் பரி­சோ­தனை செய்­வது போன்ற உடல்­ரீ­தி­யான சோத­னை­களை நினைத்து அச்­சப்­பட்டு, நீதி­மன்­றத்­துக்கு வெளியே வழக்­கு­கள் சம­ர­சம் செய்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக பங்களாதேஷூல் உள்ள செயற்­பாட்­டா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். இந்­தி­யா­வில் இரண்டு விரல்கள் பரி­சோ­தனை தடை செய்­யப்­பட்­டி­ருந்­தா­லும், சங்­க­டம் தரும் உடல் பரி­சோ­த­னை­கள் செய்­யப்­ப­டு­வது இயல்­பா­ன­தாக இருக்­கி­றது. நீண்ட இழு­ப­றி­யான விசா­ர­ணை­க­ளும் குற்­றங்­களைப் பதிவு செய்­வ­தில் தடைக்­கல்­லாக இருக்­கி­ன்றன.

பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கு­க­ளின் தர­வு­களை இணைக்­கும் அமைப்­பான ‘ஒடிர்­கர்’ அறக்­கட்­ட­ளை­யின் செய­லா­ளர் அடி­லுர் ரெஹ்­மான் இவ்­வாறு கூறு­கி­றார்,
‘‘ஊழல் பர­வ­லாக இருப்­ப­தால் சாவுத் தண்­டனை விதிப்­ப­தில் தடை­யி­ருக்­கி­றது, அர­சி­யல் செல்­வாக்­குக் கொண்ட குற்­ற­வா­ளி­க­ளால் நீதி அமைப்­புக்­கள் எளி­தாக கையா­ளப்­ப­டு­கின்­றன, அவர்­க­ளுக்­குப் பிணை கிடைக்­கி­றது, கரு­ணை­யு­டன் பார்க்­கப்­ப­டு­கி­றார்­கள்.

அவர்­களை யாரும் தண்­டிக்க விரும்­பு­வ­தில்லை’’ என்று அவர் கூறு­கி­றார். அவர் சாவுத் தண்­டனைபோன்ற கடு­மை­யான தண்­ட­னை­கள், பாதிக்­கப்­பட்­ட­வர் நீதித்­து­றையை அணு­கு­வ­தற்கு எதிர்­ம­றை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­ப­தையே இது தெளி­வா­கக் காட்­டு­கின்­றது. பொலிஸ், நீதித்­துறை, அரசு அதி­கா­ரி­கள் மற்­றும் தனி­ந­பர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் சமு­தாய அணு­கு­மு­றை­க­ளில் மாற்­றம் ஏற்­பட்­டா­லன்றி, குற்­ற­வி­யல் சட்­டங்­கள் உண்­மை­யில் குற்­றங்­க­ளின் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தில் மிக­வும் குறை­வான தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்­தும்.