கடத்தல் கும்பலிடமிருந்து 7 பெண் குழந்தைகள் மீட்பு!!

மூன்று முதல் ஏழு வயதிற்குட்பட்ட 7 பெண் குழந்தைகள் ஹைதராபாத்திலிருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள யாதகிரிகுட்டா (தெலுங்கானா) பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மீட்டுள்ள ரச்சகொண்டா பொலிஸார் இக்குழந்தைகளை கடத்திய ரம்யா, காளி, பாக்யா, நீலா, துர்க்கம்மா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

சங்கர் மற்றும் யாதகிரி என்று இரு தரகர்களிடமிருந்து இவர்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இக்குழந்தைகளை 30 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் வரை செலுத்தி பெற்றுள்ளனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யாதகிரி என்பவர் அண்மையில் தடுப்புக் காவல் சட்டதின் கீழ் சிறைப்பட்டுள்ளதாகவும், சங்கர் ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் யாதகிரி பொலிஸ் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாச சரியூலு தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பிறகு, இந்த 5 பேர் மீதும் தடுப்புக் காவல் சட்டம் பாயும் என நம்பப்படுகின்றது.

“இந்த 5 கடத்தல்காரர்களும் குழந்தைகளின் தாய்கள் போல நடித்து தனி வீடுகளில் வசித்து வந்துள்ளனர்” என பொலிஸ் துணை கமிஷனர் ராமசந்திர ரெட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.

“மீட்கப்பட்ட குழந்தைகளின் ரத்த வழி பெற்றோரை கண்டறிய காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து வருகிறோம்.

அப்படி அக்குழந்தைகளின் பெற்றோரை கண்டறியும் பட்சத்தில் அவர்களின் டி.என்.ஏ. சரிபார்க்கப்பட்டு அவர்களின் குழந்தை ஒப்படைக்கப்படும்” என யாத்ரி உதவி பொலிஸ் ஆணையாளர் ஸ்ரீனிவாச சரியூலு உறுதியளித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும், 24 குழந்தைகளை கடத்தல்காரர்கள் பிடியிலிருந்து ரச்சகொண்டா பொலிஸ் மீட்டுள்ளது.

அதில் அனைவரும் 16 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் என்பதோடு அதில் 6 குழந்தைகள் 6 வயதிற்குட்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறான பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் யாதகிரிகுட்டாவில் உள்ள 7 பாலியல் தொழில் விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.