மெல்ல மெல்ல சிங்கள மயமாகும் யாழ்ப்பாணம்….!!

யாழ். குடாநாட்டிலுள்ள அனைத்து ஊர்களின் பெயர் பலகைகளும் காட்சிப்படுத்தும் போது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து, தென்னிலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளது.வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் யாழ். குடாநாட்டிலுள்ள அனைத்து நிர்வாக அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.யாழ்ப்பாண மாகாண நிறுவனத்தின் அதிகாரிகள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த தேரர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவு பிரதானிகளின் தேவைக்காக யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல இடங்களில் உள்ள பெயர் பலகையில் தமிழ் பெயர் சிங்களத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போதிலும், அது பாரிய தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான உதாரணமாக யாழ்ப்பாணத்தில் நாகதீபம் ஒன்று இல்லை எனவும் நயினாதீவு மாத்திரமே உள்ளதாகவும், அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகை முற்றிலும் பிழையானதென அவர் கூறியுள்ளார்.உடனடியாக அந்த பெயர் பலகையை மாற்றுமாறும், யாழ்ப்பாணத்தில் அதிகமாக தமிழ் மக்கள் மாத்திரமே உள்ளமையினால், முதலில் தமிழ் மொழியில் எழுத வேண்டும். அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றமையினால் ஆங்கிகல மொழியை இரண்டாவதாகவும், சிங்களத்தை மூன்றாவதாகவும் எழுதி காட்சிப்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வரின் அறிவிப்பை இனவாத சிந்தனையாக சித்தரிக்கும் வகையில் பல தென்னிலங்கை ஊடகங்கள் முயற்சிக்கின்றமை இதன்மூலம் அம்பலமாகி உள்ளதாக பல்வேறு தரப்பினரும் தகவல் வெளியிட்டுள்ளனர்.