படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்ற வாள் வெட்டு கும்பல் ; யாழில் பயங்கரம்

தாவடிப் பகுதியில் நேற்றைய தினம் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர் வீட்டின் உள்ளே ஏனையில் படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்றதனால் தாயார் பெரும் பதற்றமடைந்தார்.

தாவடி , சுதுமலை , இணுவில் பகுதிகளில் நேற்று மாலை 5 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 12 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் 3 வீடுகளில் புகுந்து தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போதே மேற்படி சம்பவமும் இடம்பெற்றது.

சுதுமலைப் பகுதியில் ஓர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் தாவடியில் உள்ள ஓர் வீட்டின் கேற்றை வாளால் வெட்டி சேதப்படுத்தியவாறு உள்நுழைந்துள்ளனர்.

இதன்போது வீட்டின் கிணற்றடியில் நின்ற வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் ஓடிச் சென்றுள்ளார்.

இதன்போது உள்ளே இருந்த வீட்டார் ஓடிவந்து வீட்டின் முகப்பு பகுதியில் இருந்த இரும்பினாள் ஆக்கப்பட்ட சுருக்கு பாதுகாப்பு கதவினை உடனடியாக இழுத்து மூடியுள்ளார்.

இதன்போது வாள்கள் சகிதம் முகத்தினை துணிகளால் கண்டியவாறு உள்நுழைந்த 9பேர் வீட்டின் முற்றத்தில் நின்ற இரு மோட்டார் சைக்கிள்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதோடு வீட்டின் யன்னல்களையும் தாக்கிச் சேதப்படுத்தினர்.

இருப்பினும் வீட்டின் முன்னாள் இருந்த இரும்பு கதவை உடனடியாக உடைக்க முடியாதமையினால் வெளியில் இருந்த பொருட்களை சேதமாக்கியுள்ளனர்.

இவ்வாறு வீட்டு யன்னல்களை சேதம் செய்த நிலையில் வீட்டின் உள்ளே யன்னலோரம் ஏனையில் சிறு குழந்தை தூங்கியுள்ளது.

அவ்வாறு ஏனையில் காணப்பட்ட குழந்தையை தாக்குதல் தாரிகளில் ஒருவன் புகைப்படம் எடுத்தமையினால் தாயார் பெரும் பதற்றமடைந்துள்ளார்.

அதன் பின்பு வீட்டின் உள்ளே சென்று பொருட்களை சேதமாக்க முயன்றபோதும் இரும்பு கேற்றை தாண்டிச் செல்ல முடியாதமையினால் வீட்டின் உரிமையாளரை எச்சரித்தவாறு அவரையும் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தாவடியில் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்ற குழுவினர் இணுவில் மஞ்சத்தடிப் பகுதியிலும் ஓர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் செல்லும்போது வீதியால் பயணித்த ஓர் முச்சக்கர வண்டி மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இவ்வாறு தாக்குதல் நடாத்தியவர்களை வீதிகளில் பலரும் அவதானித்துள்ள நிலையில் அனைவரும் சுமார் 18 தொடக்கம் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவே இருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இதேநேரம் இணுவில் பிரதேசத்தில் இரு வர்த்தக நிலையத்தில் இரு முச்சக்கர வண்டிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வன்முறையில் ஈடுபட்ட 50ற்கும் மேற்பட்டோரை கைது செய்து வன்முறையை கட்டுப்படுத்தி விட்டோம் . எனப் பொலிஸார் கூறிய பின்பு இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாகவும் காணப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like