முதலைக்கு இரையாகிய மூதாட்டி! மட்டக்களப்பில் நடந்த சோகம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை மயிலந்தனை பிரதேசத்தில் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகாவலி ஆற்று நீரோடையில் குளிப்பதற்காகச் சென்று காணமால்போன மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஆற்றில் காணமல்போனதாக தெரிவிக்கப்பட்ட மூதாட்டியின் சடலத்தின் ஒரு பகுதியே இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொன்னன் மாரியாய் என்ற 70 வயது மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று மாலை வீட்டில் மதிய உணவிற்கான சமையல் பணிகளை முடித்து விட்டு அருகில் உள்ள நீரோடையில் குளிப்பதற்காகச் சென்றவர் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

எனினும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீரோடையில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என நீரோடையில் தேடும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் குளிப்பதற்காக அணிந்திருந்த சேலையினை உறவினர்கள் மீட்டுள்ளதோடு அது கிழிந்த நிலையில் காணப்பட்டுளளது.

இதேவேளை சடலம் கிடைக்காமையினால் பொலிசாரின் உதவியுடன் சடலத்தினை தேடும் பணியில் இன்று உறவினர்கள் ஈடுபட்டனர். இதன்போது அவரது சடலத்தின் ஒரு பகுதியினை நீரோடையில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலத்தின் ஏனைய பகுதிகளை முதலைகள் உணவிற்காக உட்கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.