இளைஞர்களை ஏமாற்றிய பெண் கைது!

நியூசிலாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பிரதேசத்தில் வாழும் 70 வயதுடைய பெண்ணே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் நாட்டின் பல பிரதேசங்களில் மத தலைவர்களுடன் நுட்பமான முறையில் நட்புறவு ஏற்படுத்தி தான் நியூசிலாந்து குடியுரிமை பெற்றவர் என கூறி வந்துள்ளார்.

மத வழிபாட்டு தலங்களுக்கு வரும் மக்களுக்கு நியூசிலாந்தில் தொழில் பெற்றுக் கொடுக்க முடியும் என கூறி தனது மோசடியை ஆரம்பித்துள்ளார்.

அண்மையில் இந்த பெண் நுவரெலியா, பூண்டுலோயா பிரதேசத்தில் உள்ள விகாரையின் தேரர் ஊடாக 16 இளைஞர்களிடம் 56 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளார்.

தான் சிங்கப்பூரில் 8 வருடங்கள் இருந்ததாகவும், நியூசிலாந்தில் 8 வருடங்கள் இருந்ததாகவும், அவர் கூறியுள்ளார். தனது வாழ் நாள் முழுவதும் உலகம் சுற்றி வந்துள்ளதாகவும், இதனாலேயே பயமின்றி தான் இவ்வாறு தொழில் பெற்றுக் கொடுப்பதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டுடன் தலா 3 லட்சம் பணத்தை பூண்டுலோயாவிலுள்ள இளைஞர்களிடம், குறித்த பெண் பெற்றுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்குகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே விசேட சுற்றி வளைப்பின் போது மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.