யாழ் KKS வீதியில் பட்டப்பகலில் நகை கடை உரிமையாளருக்கு நடந்த விபரீதம்!

யாழ்.நகரில் இயங்கும் பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் வாள் முனையில் கொள்ளையிட முயன்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த கடை உரிமையாளர் கடையைப் பூட்டிவிட்டு வீடு செல்லும்போது வாள் முனையில் கொள்ளையர்கள் அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற நிலையில் தனது சாதுரியத்தினால் தப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நகைக் கடை நடாத்தும் ஓர் உரிமையாளர் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் கடையை மூடிவிட்டு துவிச்சக்கர வண்டியில் கொக்குவிலில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இவ்வாறு சென்றுகொண்டிருந்தவரை இரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தவர்கள் வாள் முனையில் மடக்கியுள்ளனர்.

இதனால் நிலைகுலைந்ந நகைக் கடை உரிமையாளரை வாள் முனையில் அச்சுறுத்தியபடி பணத்தினை எடுக்குமாறு கோரியுள்ளனர். இதன்போது பணத்தை எடுப்பதுபோல் பாசாங்கு செய்த கடை உரிமையாளர் துவிச்சக்கர வண்டியை தூக்கி வாளுடன் நின்றவர்மீது எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இவ்வாறு தப்பியோடியவர் அருகில் இருந்த மரக்கடை ஒன்றிற்குள் தஞ்சமடைந்தார். அங்கே அதிக மக்கள் பிரசன்னம் இருந்தமையினை அவதானித்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் தப்பிச் சென்றதனால் நகை கடை உரிமையாளரின் பணமும் கழுத்தில் இருந்த 5 பவுண் தங்கச் சங்கிலி மோதிரம் என்பனவும் தப்பின.

காங்கேசன்துறை வீதி, தட்டாதெருச் சந்திப் பகுதியில் பகல்வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதுடன், நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் செல்லும் பக்கத்தர்கள் உட்பட ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அவ் வழியால் போக்குவரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.