இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராக ரஜினிகாந்த்? பாஜகவின் இரகசியத் திட்டம்?

 

இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தின் பெயரும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.

புதிய குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை தேர்ந்து எடுக்க பிரதான அரசியல் கட்சிகள் இப்போதே ஆலோசனை நடத்த தொடங்கி இருக்கின்றன என டெல்லித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில், பாஜக தங்கள் கட்சி சார்பில் ஒரு பட்டியலை வைத்திருக்கின்றது என்றும், அதில் இந்தியாவின் மிக முக்கியமான தலைவர்களின் பெயர்கள் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க. தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் மாநில பெண் கவர்னர் திரவுபதி முர்மும், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோரது பெயர்கள் இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இதுவொருபுறமிருக்க, நடிகர் ரஜினிகாந்த் பெயரும், தொழில் அதிபர் “இன்போசிஸ்” நாராயண மூர்த்தி பெயரும் குடியரசுத் தலைவர் பதவிக்காக, பரிந்துரைக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த இருவரது பெயர்களையும் பாரதிய ஜனதா கட்சி மிக இரகசியமாக வைத்துள்ளதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தத் தகவல்கள் விபரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஜினி காந்தின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அரசியல் பிரச்சினைகள் தீவிரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கையில்,

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ரஜினியை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க கூடும் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இது குறித்து ரஜினி தரப்பு எதுவும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ரஜினிகாந்தின் பெயர் அடிபடுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல்-மந்திரியும்,ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.