வாள் வெட்டுக்குழுவின் உறுப்பினர், கைவேலி துப்பாக்கிச் சூட்டில் மரணம்

முல்லைத்தீவு கைவேலி பகுதியில் வாள் வெட்டுக்குழு மீது வீட்டின் உரிமையாளர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி (இடியன் / நாட்டு துப்பாக்கி) சூட்டில் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயதுடைய திருச்செல்வம் கபிலன் எனும் இளைஞரே சிகிச்சை பயனின்றி இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

முல்லைத்தீவு மாவட்டம் கைவேலி, மருதமடுகுளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணியளவில் அத்துமீறி 6 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு ஒன்று உட்புகுந்து வீட்டில் இருந்த ஐவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தது.

அதன் போது வீட்டில் இருந்த இரு பெண்கள் தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பியோடியுள்ளனர். ஏனைய மூவரும் தாக்குதலுக்கு இலக்கியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளரான 45 வயதுடைய பொ.செல்வக்குமார், அவரது மனைவியான 43 வயதுடைய செ.புஸ்பகுமாரி மற்றும் அவரது மகன் ஆகியோர் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

தாக்குதலாளிகளின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வீட்டின் உரிமையாளரான செல்வக்குமார் வீட்டில் இருந்த (இடியன்) துப்பாக்கியை எடுத்து தாக்குதலாளிகள் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டார்.

குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தாக்குதலாளி படுகாயமடைந்தார். துப்பாக்கி சூட்டினை அடுத்து ஏனைய தாக்குதலாளிகள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர்.

அதனை அடுத்து அயலவர்களின் உதவியுடன் தாக்குதலுக்கு இலக்கான மூவரும் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தாக்குதலாளியும் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் ஆபத்தான கட்டத்தில் இருந்தமையால் அவரை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

அனுராதபுரம் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை பயனின்றி இன்று வியாழக்கிழமை காலை அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த முல்லைத்தீவு காவற்துறையினர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்கள் எனும் குற்றசாட்டில் கோம்பாவில் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.