பதவியை துறந்தார் அனந்தி!

வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அண்மையில் இந்திய பயணமொன்றை செய்திருந்தார். இந்திய பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமைச்சராக பெற முடியாத நிலை ஏற்பட்டபோது, அமைச்சு பதவியை தவிர்த்து, சாதாரண மாகாணசபை உறுப்பினராகவே விண்ணப்பித்து அனுமதியை பெற்றிருக்கிறார்.

வடக்கு மாகாண அமைச்சரவை சிக்கல் தீராததால், சட்டபூர்வ அமைச்சரவை கூட முடியாத நிலைமை நீடிக்கிறது. அமைச்சரவை இருக்கிறதா, இல்லையா என ஒரு தரப்பு முதலமைச்சரிற்கு குடைச்சல் கொடுத்தும் வருகிறது.

இந்த சிக்கலை வடக்கு ஆளுனரும், அவைத்தலைவரும் சந்திக்க வேண்டிய நிலைமையொன்று அண்மையில் ஏற்பட்டது.

வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், இந்திய பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பது அனந்தியின் திட்டம். இதற்கு முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்திய பயணத்திற்கு அனுமதி கோரி, ஆளுனருக்கு அனந்தி கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அதில் அமைச்சர் என குறிப்பிட்டு அனந்தி கையொப்பமிட்டிருந்தார்.

இப்போதைய நிலைமையில்அமைச்சர் என குறிப்பிடப்பட்ட விண்ணப்பத்திற்கு அனுமதித்தால் சிக்கல் என கருதியோ என்னவோ, ஆளுனர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாகாணசபை உறுப்பினர் என்று குறிப்பிட்டு, மீள அனுமதி கோரும் கடிதத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டிருக்கிறார்.

இதையடுத்து, அமைச்சர் அனந்தி சசிதரன் இன்னொரு அனுமதிக் கடிதத்தை வடக்கு அவைத்தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதிலும், அமைச்சர் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அவைத்தலைவரும் அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாகாணசபை உறுப்பினர் என குறிப்பிட்டு கடிதம் தந்தாலே தன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமென குறிப்பிட்டிருக்கிறார்.

இறுதியில், மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் என்று குறிப்பிட்டே கடிதம் எழுதி அனுமதி பெற்றிருக்கிறார்.