வடபகுதியை உலுக்கிய கோர விபத்து : நான்கு பெண்கள் பலி- திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா?

வவுனியா – ஓமந்தையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த 53 வயதான முத்தையரெட்டி கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் கோயில் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் கார் ஒன்று மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த காரை செலுத்திய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட மூன்று பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் யோகரத்தினம் இசைஞானவதி (வயது-52), காண்டீபன் ஜமுனாரஞ்சினி (வயது-32), காண்டீபன் டிசாலினி (வயது-12), சுவீடனின் வசிக்கும் கமலநாதன் சிவரஞ்சனி (வயது-30) ஆகியோரே உயிரிழந்தனர்.

சுவீடனைச் சேர்ந்த சிவரஞ்சியின் கணவர் கமலநாதன் (வயது-35), அவரது மகளான க.ஜெசிக்கா (வயது-7) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவை பிறப்பிடமாக கொண்ட இவர்கள் கடந்த ஜூலை மாதம் சுவீடனில் இருந்து தாயகம் வந்துள்ளனர். கிளிநொச்சியிலுள்ள உறவினர்களை பார்க்கச் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவை நிலமட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளது. வேனில் பயணித்தவர்கள் சந்திக்கச் சென்ற உறவுப் பெண், ரயில் கடவையை வேனில் நெருங்கிய சமயத்தில், அதற்கு எதிரே நின்று ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார். எனினும் சாரதி அதனை கவனிக்காமல் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

எனினும் கணப்பொழுதில் கோர விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் அருகில் வருவதை அவதானித்த சாரதி மற்றும் தந்தையும் மகனும் வாகனத்தை விட்டு பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை விபத்தின் போது வாகனத்தில் இருந்து பாய்ந்து உயிர் தப்பிய சிறுவன் சாட்சியம் அளித்துள்ளார்.

அதில், ரயில் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை தொடர்ந்தும் செலுத்தியமையினால் விபத்து ஏற்பட்டது. இதன்போது தான் கதவை திறந்து பாய்ந்து தப்பியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ரயில் தண்டவாளத்தில் ரயிலுக்கு அருகில் எந்தவொரு வாகனமும் பயணிக்கும் போது, வாகனத்தின் இயந்திரம் செயலிழக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ரயிலிலுள்ள காந்தபுலம், வாகனத்தின் மைக்ரோ பவரை செயலிழக்க செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தும் அவ்வாறான முறையிலேயே நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தின் குறுக்காக சென்ற வாகனம் செயலிழந்து அப்படியே நின்றுள்ளது. இதன் காரணமாக கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சாரதியினால் திட்டமிட்ட வகையில் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.