தாயகத்தில் சாதனை படைத்த மாணவர்களின் முழு விபரம்!

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுக் காலை வெளியாகின.

வடக்கு மாகாண மாணவர்கள் தேசிய ரீதியில் முன்னிலை பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், 198 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகழ்ஒளிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கரன் நதி இருவரும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஹோலிபமிலி ஹொன்மன்டைச் சேர்ந்த ஜெயந்தன் கிருஜனா, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த சாருகா சிவனேஸ்வரன் இருவரும் 196 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் நகரப் பாடசாலைகளான யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையிலிருந்து 273 பேர் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 103 பேர் சித்தியடைந்துள்ளனர். ஜோன் பொஸ்கோவிலிருந்து 215 பேர் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 115 பேர் சித்தியடைந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கனகலிங்கம் தேனுசன் 196 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். கிளிநொச்சி மத்திய ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த கேதீஸ்வரன் கதிர்நிலவன், தர்மபுரம் பாடசாலையைச் சேர்ந்த சந்திரபாலன் தர்மிகன் ஆகியோர் 195 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினை பகிர்ந்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 752 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 279 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 153 மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கேணி மாமடு, பழம்பாசி அ.த.க. பாடசாலை மாணவி துச்சாதனா 195 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு றோ.க. பாடசாலையைச் சேர்ந்த பெலிக் மதனராசா மேரிகன் 194 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முல்லைத்தீவு உடையார்கட்டு அ.த.க. பாடசாலையைச் சேர்ந்த ஜெயரஞ்சன் தீச்சுடர் மற்றும் கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தைச் சேர்ந்த கஜேந்திரன் தமிழரசன் இருவரும் 193 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில், மடுக் கல்வி வலயத்துக்கு உட்படட கருங்கண்டல் பாடசாலையைச் சேர்ந்த ரி.திருக்குமரன் 187 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த தயாளன் ஜேம்ஸ் தேவப்பிட்டியன் 184 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். நானாட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஜெ.சௌமியா 183 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில், சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி யிலும் பாலகுமார் ஹரித்திக்ஹன்சுஜா 197 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவரின் தந்தை சாரதியாகப் பணிபுரிகின்றார். இவரது பாடசாலை அதிகஷ;டப் பிரதேசத்துள் உள்ள பாடசாலையாகும்.

இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ச.லதுசனா, வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெ.லதுசன் இருவரும் 193 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.