பரந்தனில் பரீட்சை நேரத்தில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மின்சாரத்தைத் தடைசெய்த இ.மி.சபை!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பலரது வீடுகளுக்கான மின்சாரத்தை எவ்வித முன்னறிவித்தலுமின்றி மாலை 5.00 மணியளவில் இலங்கை மின்சார சபை தடைசெய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள், கைக்குழந்தைகளுடன் வாழ்வோர் எனப் பலரும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இலங்கை மின்சார சபை தமிழர் வாழும் பகுதிகளுக்கு வருடக்கணக்கில் மின்கட்டணச் சிட்டைகளை அனுப்பாமல் விட்டு பெருமளவு பணம் மின்சாரக் கட்டணமாகச் சேர்ந்தவுடன் அதனை அப்படியே கட்டுமாறு அடாவடியாகச் செயற்பட்டு வருகின்றது.

அதே போலத்தான் கிளிநொச்சியில் இலங்கை மின்சார சபை பல மாதங்களாக மின் பாவனையாளர்களுக்கான மின் கட்டணப் பட்டியல் சிட்டையை வழங்காமல் இருந்து விட்டு பெருமளவு பணம் சேர்ந்ததும் அதனை அப்படியே முழுமையாகச் செலுத்துமாறு கோரி அடாவடியாகச் செயற்பட்டு வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை 5.00 மணியளவில் பரந்தன் பகுதியிலுள்ள பல வீடுகளுக்குச் சென்ற இலங்கை மின்சார சபையினர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி, மின்சாரம் தடைசெய்துள்ளதைக்கூட வீட்டு உரிமையாளருக்கு அறிவிக்காமல் சென்றுள்ளார்கள்.

இதனால் பெருமளவான தமிழர்களின் வீடுகள் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றன. இதன் காரணமாக நாளை கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பலரும் படிக்க முடியாது அவலப்பட்டு நிற்கின்றார்கள்.

மற்றும் குழாய் கிணறுகளில் மோட்டர் மூலம் நீர் பெறுவோர் குடிப்பதற்குக்கூட நீரின்றி அவலப்படுகின்றார்கள், படுக்கையிலுள்ள நோயாளர்கள் பெரும் அவதிப்படுகின்றார்கள்.

இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சியில் பெருமளவான சிங்களவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள் ஈவிரக்கமின்றி இப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகப் பலராலும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களிலும் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் சந்தர்ப்பங்களில் இலங்கை மின்சாரசபை திடீரென மின்சாரத் தடைகளை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வித முன்னறிவித்தலுமின்றி இலங்கை மின்சார சபை மின்சாரத்தைத் தடை செயதுள்ளமையானது மிகவும் மோசமான செயலாகவே நோக்கப்படுகின்றது.

மின்சாரம் தடைசெய்வதாகவிருந்தால் சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டே தடைசெய்யப்டுதல் வேண்டும் என்பது சட்ட விதிமுறையாகும்.

அப்படியின்றி திடீரென மாலை நேரத்தில் மாணவர்களுக்கான பரீட்சை வேளையில் மின்சாரத்தைத் தடைசெய்துள்ளமை ஒரு திட்டமிட்ட வஞ்சம் தீர்க்கும் செயற்பாடு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.