புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட சட்ட விளக்கத்தை நாமல் வெளியிட்டுள்ளார்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பதவி விலகியதன் ஊடாக, அரசியலமைப்பின் 48ஆவது பிரிவின் முதலாவது சரத்திற்கு அமைய பிரதமர் பதவி வெற்றிடமாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு காணப்படுகின்ற அதிகாரங்களை பயன்படுத்தி, அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின் 4ஆவது சரத்திற்கு அமைய புதிய பிரதமரை நியமிப்பதற்கான அதிகாரம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தீர்மானத்திற்கு மதிப்பளித்து, பிரதமராக கடமையாற்றிய ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகிக் கொள்வார் என தான் நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

மேலும், இலங்கையில் திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.