கூட்டமைப்பின் ஆதரவு கோரி சம்பந்தனுடன் ரணில், மஹிந்த தொலைபேசியில் தொடர் பேச்சு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இன்று காலை முதல் தனித்தனியே தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தகவலை இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ரணிலும், மஹிந்தவும் சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இருவரும் தனித்தனியே பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

“இந்தப் பேச்சுக்களின்போது இருவரும் கூட்டமைப்பின் ஆதரவைக் கோருகின்றனர். நான் உடனடிப் பதில் எதையும் அவர்களிடம் தெரிவிக்கவில்லை. பொறுத்திருந்து பரிசீலித்துவிட்டு முடிவை அறிவிப்பேன் எனக் கூறி வருகின்றேன்” என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.