ஜனாதிபதி இன்று மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28), நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க வழிமொழிந்து உறுதிப்படுத்தினார்.

புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, தமது ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கிவதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, புதிய அமைச்சரவை நாளை (29) நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.