இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! மைத்திரியை எச்சரிக்கும் அமெரிக்கா

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயற்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து விலகியிருக்குமாறு அமெரிக்கா, அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைய சபாநாயகருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளுக்கமைய, அரசாங்கத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது யார் என்பது தொடர்பில் தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா தனது அறிக்கையின் ஊடாக எச்சரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இந்நிலையில் இலங்கையில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.