கொழும்பில் அதிரடி திருப்பம்! மைத்திரிக்கு எதிராக 126 உறுப்பினர்கள்! ஆபத்திலிருந்து தப்பினார் ரணில்?

நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இது தொடர்பான கடிதம் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி, அரசியலமைப்பிற்கமைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரத்தை சபாநாயகர் பெற்றிருக்கிறார்.

இதனையடுத்து அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்திருந்தார்.

பிரதமராக பதவியேற்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் உறுப்பினர்களை திரட்டுவதற்காக இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி, உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது.

இதன்போது பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கான பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை சபாநாயகர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்து நாட்டின் சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் அரசு உரிமையை பாதுகாக்குமாறு நாட்டின் பிரதமராக தான் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.