இராணுவத்தினருக்காக ஆலய முன்றலில் காத்திருந்த பக்தர்கள்…..!

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்தின் தீபாவளி நிகழ்வுக்காக ஆலய பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவம் மற்றும் மாவட்ட செயலக ஏற்பாட்டில் தேசிய தீபாவளி நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தில் இருந்து அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், கலாசார உத்தியோகத்தர் ஆகியோரே நிகழ்வுக்கு வருகை தந்த நிலையில் நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் தமது சீருடைகளுடன் ஆலயத்திற்குள் பிரவேசித்திருந்தனர்.

காலையில் இருந்து மதியம் வரை இராணுவமயமாக ஆலய சூழல் காட்சியளித்தது. இதனால் இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றாகிய கேதாரகௌரி விரதம் அனுட்டித்தவர்களும், தீபாவளி திருநாளில் வழிபட சென்றவர்களும் அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்ததுடன், சிலர் இராணுவ பிரசன்ன அதிகரிப்பால் ஆலயத்திற்குள் நுழையாதும் திரும்பி சென்றனர்.

ஆலயத்திற்குள் வழிபாடுகளை மேற்கொண்ட பக்தர்களையும் இராணுவத்தின் வருகைக்காக சுதந்திரமாக வழிபட விடாது ஆலய நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் ஓரமாக விரட்டியிருந்தனர்.

இந்நிலையில், இந்துக்களின் விரதம் மற்றும் விசேட பண்டிகை காலங்களில் மக்களது தூய்மையான வழிபாட்டுக்கு வழியை ஏற்படுத்த ஆலய நிர்வாகம் முன்வரவேண்டும் என்றும் வழிபாடுகளை கேலிக்கூத்தாக மாற்ற இடமளிக்க கூடாது எனவும் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.