பரபரப்பான சூழ்நிலையில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் முரண்பாடுகளை கைவிட்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உள்ள வாய்ப்பு தொடர்பில் உறுப்பினர்களின் கருத்தை அறிவிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல் தொடர்பில் சபாநாயகரின் ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் செயலாளரினால் ஜனாதிபதியின் அழைப்பு உத்தரவு சபையில் வாசித்த பின்னர் அந்த நாளின் வேலை நடவடிக்கைகளை நிறைவு செய்து அன்றைய நாளுக்கு சபையை ஒத்தி வைப்பதே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ள நிலைப்பாடாகும்.

ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் அந்த கருத்திற்கு எதிர்கருத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், அன்றைய தினத்திற்கான வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக நிலையான அரசாங்கத்தின் பெரும்பான்மை கருத்தை நாடாளுமன்றத்தில் வினவ வேண்டும் என ஏனைய கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தரப்பின் கருத்திற்கும் அவதானம் செலுத்திய சபாநாயகர், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் நிலையான உத்தரவை கைவிட்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உள்ள வாய்ப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிவிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.