மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குவோம் – அமைச்சர் டெனிஸ்வரன்…

 மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குவோம் – அமைச்சர் டெனிஸ்வரன்…

எதிர்வரும் 27 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவு வழங்குவதோடு சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இதற்க்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


எமது இனத்தின் விடிவிற்காக கடந்தகாலங்களில் கொடுக்கப்பட்ட இழப்புக்கள் அளவுக்கதிகம். குறிப்பாக கொடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற உயிர்களுக்கு அர்த்தம் தேடவேண்டுமெனில், நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக ஜனநாயகரீதியில் போராடவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இந்த நல்லாட்சி அரசு நிலைத்திருக்கவேண்டுமெனில் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளாக காணப்படுகின்ற 01- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விவகாரம். 02- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை. 03- படையினர் கையகப்படுத்திய காணிகள் விடுவிப்பு. ஆகிய முக்கிய இம்மூன்று பிரச்சினைகளும் உடனடியாக தீர்த்துவைக்கப்படவேண்டும். அவ்வாறு தீர்த்துவைத்தால் மட்டுமே தமிழ் மக்களுடைய மனங்களையும் இந்த அரசு வெல்லமுடியும்.
வலி வேதனைகளோடு நாளாந்தம் வீதிகளில் உறங்கிக்கிகொண்டிருக்கும் எமது மக்களின் துயர் தீர்க்க மேதகு ஜனாதிபதி அவர்களும் கெளரவ பிரதமமந்திரி அவர்களும் உடனடியாக முன்வரவேண்டுமென்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். அபிவிருத்திகள் இன்று இல்லாவிட்டாலும் நாளை நாம் அடைந்துகொள்ளமுடியும் ஆனால் நமது உரிமைகள் நமக்கு இன்று அத்தியாவசியமானதாக இருக்கிறது காரணம் நாள்தோறும் பற்பல துன்பங்களோடு எமது தமிழ் உறவுகளது வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது ஆகவே இந்த முடிவற்ற அனைத்து அகிம்சை போராட்டங்களுக்கும் இந்த அரசு ஓர் நல்ல முடிவை கொடுப்பதற்கு அனைத்து மக்களதும் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் முக்கியமானதொன்றாகும்.
அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினாலும், காணி மீட்ப்புப்போராட்டக்காரர்களாலும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு மற்றும் கவனவீர்ப்புப்போராட்டத்திற்கு சகல பொதுமக்களும், போக்குவரத்துத்தரப்பினரும், வர்த்தக சங்கங்களும், பொது அமைப்பினரும் தமது பூரண ஆதரவை வழங்கி மேற்படி போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்பாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் குறித்த தினத்தில் நோயாளர்கள், மாணவர்கள், அத்தியாவசிய தேவைகளை உடையவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தாம் வருந்துவதாகவும் அதேவேளை இவ்வாறானவர்கள் சற்றுப்பொறுத்துக்கொண்டு எமது மக்களது உரிமைப்போராட்டம் வெற்றி அடைவதற்கு தோள்கொடுக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like