யாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்!!

யாழ் – கொட்டடி , சூரிபுரத்தில் வீட்டில் கொள்ளையிடப்பட்ட 18 தங்கப் பவுன் தங்க நகைகளில் தாலிக்கொடியை மட்டும் நேற்று அதிகாலை வீட்டில் கொண்டு வந்து போட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டிற்குள் 9ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மூன்று கொள்ளையர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இவர்கள் தேடுதல் நடத்திய சமயம் வீட்டு உரிமையாளர் விழித்துக்கொண்டார். அவ்வாறு விழித்தவர் நிலைமையை ஊகித்து கொண்டு குரல் எழுப்பியுள்ளார்.

கணவரின் குரலைக் கேட்டு மனைவியும் விழித்தெழுந்த போது கத்தி முனையில் கணவரை அச்சுறுத்தியவாறு மனைவி அணிந்திருந்த தாலிக்கொடியை கழட்டுமாறு கொள்ளையர்கள் கேட்டுள்ளனர்.

இதற்கிடையில் கணவரை கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் கணவரின் காலில் இருந்து இரத்தம் பெருகிய நிலையில் கணவர், கொள்ளையனின் கையில் இருந்த கத்தியை மடக்கிப் பறித்துள்ளார்.

இதனால் வீட்டில் இருந்த பொருட்களால் வீட்டு உரிமையாளரை தாக்கியவாறு மனைவியின் கழுத்தில் இருந்த 11 பவுன் தாலிக் கொடியினை அறுத்து எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் தொடர்ந்து குரல் எழுப்பியமையினால் கையில் அகப்பட்ட 18 பவுன் நகைகளுடன் மூன்று கொள்ளையர்களும் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டில் கைப்பற்றப்பட்ட கத்தி மற்றும் திருடர்கள் திறந்த கதவில் இருந்த கை அடையாளம் என்பவற்றினை சேகரித்து அதன் மூலம் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கத்தி அடையாளங்கள் தொடர்பில் குறித்த பகுதியில் கதைகள் வெளிவந்ததை அடுத்து களவாடப்பட்ட தாலிக்கொடியில் இருந்த காசுகள் அகற்றப்பட்ட 7 பவுனுக்கும் அதிக நிறைகொண்ட தாலிக்கொடி ஒன்று நேற்று காலையில் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.