மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவலை வெளியிட்ட ரணில்

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தெரிவித்து நாடாளுதமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கையொப்பமிட்ட ஆவணத்தை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பா.உறுப்பினர்கள் 122 பேர் வழங்கிய ஆவணத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக இருந்தால், நாளை பாராளுமன்றத்தில் ஆவணத்தை சமர்ப்பித்து பெரும்பான்மையை காட்டுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டிருந்தனர்.

அதேநேரம், தனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த பிரேரணைக்கு, 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அதன்படி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமொன்று அமைக்கப்படும் எனின், அந்த அரசாங்கம் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை என்பதை இன்று தெரிவித்துள்ளனர். அதற்கமைய, அரசியலமைப்பின் 42ஆவது சரத்திற்கு அமைய அந்த அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என அறிவிக்கப்பட்டது.

அத்துடன், 3 வர்த்தமானி அறிவித்தல்களும் சட்டத்திற்கு புறம்பானது எனவும் அறிவிக்கப்பட்டது. பிரதமரை நீக்கும் வர்த்தமானி, புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கான வர்த்தமானி ஆகியன சட்டத்திற்கு புறம்பானவை என அறிவிக்கப்பட்டது. மக்களின் ஆணையை உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பொன்று இன்று நடைபெற்றது. இது மக்கள் ஆணையின் வெற்றியாகும்.

இந்த அரசாங்கம் கூறும் அமைச்சர்களுக்கும் பெயர்பதாகை போடப்பட்டுள்ள அமைச்சர்களுக்கும் காட்போட் அமைச்சரவைக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை என்பதை அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே, தற்போது முதல், உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தடையுத்தரவு மற்றும் பாராளுமன்றத்தின் இன்றைய தீர்மானத்திற்கு அமைய, இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக முன்னெடுக்கப்படும் ஆட்சியாகும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.