நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் நோக்கில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இது குறித்து அண்மையில் அம்பாறையில் வைத்து கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 110 அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லயன் எயார் விமானம் மீது தாக்குதல் நடத்தி 48 பயணிகளை கொலை செய்தமை, 47 படைவீரர்களை கொன்று எரித்தமை மற்றும் பாரிய குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சரவை பத்திரம் அனுமதிக்கப்பட்டால் அரசியல் கைதிகளுக்கு எதிரான போர் குற்றச்செயல் விசாரணைகளும் ரத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல் கைதிகளை விடுதலை செய்வது இராணுவத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும் எனவும், இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை கொலை செய்த இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டால் அது தண்டனை விதிக்கப்பட்ட படையினருக்கு அநீதியை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.