ஐ.தே.கவுடன் இணையும் மகிந்த அணி அமைச்சர்? வெளிவந்துள்ள புதிய தகவல்

ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, மலிக் சமரவிக்ரமவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கி, அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்ட வசந்த சேனாநாயக்க, வடிவேல் சுரேஷ் ஆகியோர் இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

ரவி கருணாநாயக்கவின் தலையீட்டில் இவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், மலிக் சமரவிக்ரமவை விஜயதாச ராஜபக்ச, தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

“என்ன கூறினாலும் நாங்கள் தீவிரமான ஐக்கிய தேசியக் கட்சியினர். நீங்கள் கோரிக்கை விடுத்தால் மீண்டும் கட்சிக்கு வருவது குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். தலைவருடன் பேசி விட்டு கூறுங்களேன்” என்று விஜயதாச ராஜபக்ச, மலிக் சமரவிக்ரமவிடம் கூறியுள்ளார்.

ரவி கருணாநாயக்க இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைத்து வந்துள்ள நிலையில், தான் தலையிட்டு விஜயதாச ராஜபக்சவை கட்சிக்குள் கொண்டு வர மலிக் சமரவிக்ரம விரும்புவதாக கூறப்படுகிறது.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பியசேன கமகே, ஏ.எச்.எம்.பௌசி, மனுஷ நாணயக்கார ஆகியோர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய உள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்