ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம்! இன்று நாடாளுமன்றில் என்ன நடக்கும்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டம் இணக்கப்பாடுகள் இன்றி முடிவடைந்துள்ளன.

இந்த கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது பாராளுமன்றத்தை அமைதியான முறையில் நடத்திச் செல்ல நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதுடன் புதிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கான முறைமைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த கூட்டத்தின் போது மகிந்த மற்றும் ரணில் தரப்பினருக்கு இடையே கடும் வாக்கு வாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் அதனை காட்டுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்றைய தினமே ஜனாதிபதி செயலகம் சென்று 113 பேரின் சத்தியக்கடதாசியுடன் பெரும்பான்மையை காட்ட நடவடிக்கையெடுக்கப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை வாய்மொழி மூலம் நடத்துவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பிலேயே சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூலம் வாக்கெடுப்பை நடத்துவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்தவேண்டும் அல்லது இலத்திரனியல் முறையில் நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மோதல் இன்றி பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு சர்வகட்சி கூட்டாரத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுப்பதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.