ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க, ஹர்சன ராஜகருண, மயந்த திஸாநாயக்க, ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்டவர்கள் மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர் வரக்காகொட ஞானரத்ன தேரர் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தனர்.

இதன்போது தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து பேசியிருந்தனர். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“பொதுத்தேர்தலொன்றை நடத்த முடியாது. எமது கருத்துக்களை ஏற்று, சட்டத்திற்கு அமைய உயர்நீதிமன்றம் பொதுத்தேர்தலை தற்போது இடைநிறுத்தியுள்ளது.

ஜனாதிபதிக்கு அவசியம் எனின், இந்த பிரச்சினை தொடர்பில் பொதுமக்களின் கருத்தை அறிய ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல முடியும். சிறந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் எமக்குள்ளனர்.

அது தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை. இளைஞராக இருக்க முடியும். இளைஞர் அல்லாது ஒருவராகவும் இருக்கலாம். நடுத்தர வயதான ஒருவராகவும் இருக்கலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நாம் அச்சமடையவில்லை. எனினும், பொதுத்தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒன்றாக நடத்துமாறே நாம் கோருகின்றோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட உள்ளதாக” நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச அல்லது குமார வெல்கம ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது ஐக்கிய தேசியக் கட்சியும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது