அம்பலமான பல வருட இரகசியம்??

யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர் என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

எனக்கு விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ள அவர் 2003 இல் கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட சந்திப்பு என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சமாதானத்திற்கான வாய்ப்புகள் மற்றும் விடுதலைப்புலிகளிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானம் குறித்த எங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் எனவும் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

நான் அப்போது காணப்பட்ட வாய்ப்பை பயன்படுத்துமாறு பிரபாகரனை கடுமையாக வலியுறுத்தினேன்,ஆனால் பிரபாகரன் சமாதான பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை பின்னர் நான் உணர்ந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் சந்திப்பிற்கு நாங்கள் ஓன்றாக மதிய உணவருந்தினோம் அவ்வேளை பிரபாகரன் சற்று இயல்பான நிலையில் காணப்பட்டார் காலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீவிரமானவையாகவும் உத்தியோகபூர்வமானவையாகவும் காணப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதிய உணவிற்கு பின்னர் நாங்கள் உத்தியோகபூர்வமற்ற பேச்சுகளில் ஈடுபட்டோம்,பிரபாகரன் தனது மகன் தனது குடும்பம் தனது எதிர்பார்ப்புகள் குறித்து குறிப்பிட்டார் எனவும் அகாசி தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் தனக்கு வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை தவறவிட்டார் என்பது குறித்து நான் ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர் எனவும் அகாசி தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் அவர்கள் அதற்காக என்னை தொடர்புகொண்டனர் தான் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவை சேர்ந்தவர் என என்னை தொடர்புகொண்ட நபர் தெரிவித்தார் எனவும் அகாசி தெரிவித்துள்ளார்.

நான் வெறுமனே யுத்த நிறுத்தம் மாத்திரம் போதுமானதல்ல ஆயுதங்களை கைவிடவேண்டும், பொதுமக்களை விடுவிக்கவேண்டும் என அவரிடம் தெரிவித்தேன் எனவும் அகாசி குறிப்பிட்டுள்ளார்.

அவர் எனது நிலைப்பாட்டை பிரபாகரனிடம் தெரிவித்த பின்னர் என்னை தொடர்புகொள்வதாக தெரிவித்தார் ஆனால் பின்னர் என்னைஅவர் தொடர்புகொள்ளவி;ல்லை என்றும் அகாசி குறிப்பிட்டுள்ளார்.