அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாளை காலை கூடும் நாடாளுமன்றம்!

பலத்த பாதுகாப்பின் மத்தியில் நாடாளுமன்றம் மீண்டும் நாளை காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக நாளைய அமர்வு நேரத்தின்போது நாடாளுமன்ற வளாகம் மற்றும் கட்டடத்தொகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் கடந்த 14,15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஆளும் எதிர்த்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே சபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பார்வையாளர் என எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு அன்றையதினம் கூடியபோது, வெறும் ஏழே நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,நாளைக் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போதும் ஆளும் எதிர்த்தரப்பினரிடையே சர்ச்சைகள் – மோதல்கள் ஏற்படலாம் என்பதனால் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.