மகிந்த மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளட்டும்! நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்

இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியாகினாலும், இடைக்கால வரவு செலவு திட்டத்தை கொண்டு வர நாட்டில் அமைச்சரவை ஒன்று இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதன் காரணமாக அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு மகிந்த ராஜபக்ச வேண்டுமாயின், மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளட்டும், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் அதனை மீண்டும் நாடாளுமன்றத்தில் பார்த்து கொள்கிறோம்.

மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக 102 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறினார்கள். சரியான முறையில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அவர்களில் ஏழு, எட்டு பேர் நாடாளுமன்றத்திற்கு வர மாட்டார்கள்.

துமிந்த திஸாநாயக்க, பிரேமலால் ஜயசேகர, இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் நாடாளுமன்றம் கூடிய மூன்று தினங்களிலும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

இதனால், மகிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் ஒன்றை நிறைவேற்ற முடியாது. வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றால், ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.