நம்பிக்கையில்லா பிரேரணைகளில் தோல்வி! அமெரிக்காவிலிருந்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு நியமிக்கப்பட்ட பிரதமர் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படும் நிலமை சம்பந்தமாக கவலை வெளியிட்டு ஹொலன், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான தனது நீண்டகால நட்புறவை நினைவூட்டியுள்ள ஹொலன், சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் தலைவணங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த சில வாரங்களாக நடக்கும் சம்பவங்கள், இலங்கையின் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் மிகப் பெரிய சவால் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவியில் இருந்த பிரதமரை பதவியில் இருந்து நீக்கியமை, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை, அவசர தேர்தலை அறிவித்தமை மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவுகளை ஏற்று கொள்வது போன்ற விடயங்கள், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜதந்திர தொடர்புகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் கிறிஸ் வென் ஹொலன் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லுமாறு தெரிவித்துள்ள ஹொலன், 2015ஆம் ஆண்டுக்கு பின் இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்து காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.