அரச ஊடகங்களில் முன்னிலை பெற்ற பிரபாகரன்! அதிர்ந்து போன பெண் எம்.பி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தின நிகழ்வுகள் தொடர்பான காணொளிகள் அரச ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் பிரபாகரனின் பிறந்த தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டதை அரச ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன. இது தவறான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது ஹிருணிக்கா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பிரபாகரனின் பிறந்ததினம், புலிகளின் தினமாக யாழில் அனுஸ்டிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. பின்னர் யாழ். பல்கலையில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டது.

இப்போதுகூட, சபை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்புச் செய்யாமல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறும் சட்டவிரோத அரசாங்கத்தினரின் ஊடகவியலாளர் மாநாட்டை அரச ஊடகங்கள் ஒளிபரப்புகிறார்கள். இது தவறான ஒரு முன்னுதாரணமாகும்.

இப்படியான அடக்குமுறையை மேற்கொள்ளும் மஹிந்த தரப்பினரால், நாட்டில் ஒருபோதும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்க முடியாது. அந்தத் தரப்பினர் நாடாளுமன்றை தொடர்ச்சியாக புறக்கணிக்கிறார்கள். சபாநாயகர் மீது குறைகூறி இன்றும் அவர்கள் வரவில்லை.

உண்மையில் இது மகிழ்ச்சியானது. அதேபோல் தொடர்ந்தும் இருந்தால் உண்மையில் சிறப்பாக இருக்கும். இப்போதுதான், நாம் இதுவரை மிருகங்களுடன் இணைந்துதான் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்பது தெரிகின்றது என ஹிருணிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.