மட்டக்களப்பு இரு பொலிஸார் சுட்டுக்கொலை!! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் இருவரையும் இனந்தெரியாதோர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை நீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தினேஸ் மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இருவரும் வலையிறவு பாலத்திற்கு அருகில் இருக்கும் பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடிக்கு வழமைபோல் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு கடமைக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சோதனைச் சாவடிக்கு இன்று காலையில் கடமைக்கு சென்ற பொலிஸார் ,

துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் குறித்த இரு பொலிஸாரும் சடலமாக இருப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தபோது அவர்களை சுட்டு கொலைக் செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வி எம்.ஜ.என் றிஸ்வி சென்று சடலங்களை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுணதீவு பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்க விஷேட குழுவொன்று மட்டக்களப்புக்கு கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குறித்த குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.