பிரதமராக பதவிவகிக்க மகிந்தவுக்கு அதிகாரம் கிடையாது! நீதிமன்றில் வாதிட்ட சட்டத்தரணி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு, நாடாளுமன்றில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடையாது என்பது சபாநாயகரால் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ஈ.கனகேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், தொடர்ந்தும் அவர் அந்தப் பிரதமர் பதவியில் நீடிப்பது உகந்ததல்லவென, சட்டத்தரணி எடுத்துக் கூறினார்.

மகிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கும் பிரதமர் பதவியை அவர் வகிப்பதற்கும், சட்ட ரீதியில் அதிகாரம் இல்லையெனத் தீர்ப்பளிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கைச்சாத்திட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சட்டத்தரணி கனகேஸ்வரன், மேற்கண்டவாறு கூறினார்.

“அரசமைப்பின் 13வது திருத்தத்தின் பிரகாரம், மகிந்த ராஜபக்சவால், பிரதமர் பதவி வகிப்பதற்கு சட்ட ரீதியான அதிகாரம் கிடையாதெனவும், சட்டத்தரணியால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.