முல்லைத்தீவில் வாள்வெட்டு!நால்வர் படுகாயம்!!

முல்லைத்தீவில் வாள்வெட்டு!நால்வர் படுகாயம்!!

முல்லைத்தீவில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மீது மீண்டும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மல்லாவி பொலிஸ் பிரிவில் உள்ள கல்விளான் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்றிற்கும், திருநகர் கிராம இளைஞர் குழு ஒன்றிற்கும் இடையில் நீண்டகாலமாக பகை நிலவி வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரண்டு தரப்பும் மல்லாவி நகரப்பகுதியில் சந்தித்த போது கத்தி, அரிவாள் கொண்டு மோதிக் கொண்டுள்ளனர்.

படுகாயமடைந்த ஒரு தரப்பினர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதன்போது, வாள் வெட்டுக் காயங்களுக்குள்ளான இரண்டாவது குழுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த இருவரையும் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் மருத்துவர் மற்றும் தாதி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்தது வைத்தியசாலைக்கு வந்த மல்லாவி பொலிசார் நிலைமையைக் கட்ப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் திருநகர் கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன் சுஜீபன் (வயது 21), கல்விளான் கிராமத்தைச் சேர்ந்தவர்களான, நவரத்தினம் தஜீபன் (வயது 21), சிவலிங்கம் வினோ ராஜ் (வயது 21) ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் திருநகர் கிராமத்தைச் சேர்ந்த கமல நாதன் கஜீபன் (வயது 26) என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், மருத்துவ தாதியர்கள் உட்பட அனைவரும் வெளிநடப்பு செய்த நிலையில், மல்லாவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.