கருவின் வீட்டில் ரணிலுடன் மனம்விட்டுப் பேசிய மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் மாலை அறிவித்திருந்தது.

இதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவும், ரணில் விக்கிரமசிங்கவும் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சு நடத்தினர் எனச் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தப் பேச்சு 10 நிடங்களே இடம்பெற்றது என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தபோதும், ஒரு மணித்தியாலம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது எனப் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகர் கரு ஜசூரியவின் இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது எனப் பிந்திக் கிடைத்த தகவல் தெரிவித்தது.

சுமுகமான சூழலில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

நேற்றிரவு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தொலைபேசியில் உரையாடினர். இதன்போதே, நாளை காலை ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பது என்று முடிவாகியுள்ளது.

முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறிவந்தார். எனினும், உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களின் பின்னரே அவர் தனது இறுக்கமான பிடிவாதத்தில் இருந்து விலகினார் என்றும் கூறப்படுகின்றது