வடக்கில் இப்படியும் நடக்கின்றது… பொதுமக்களே ஜாக்கிரதை…!!

வவுனியா நகரசபையின் தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்கள் இருவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து அவர்கள் இருவரிடமிருந்தும் ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்து, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நகரசபையில் கடந்த 6 மாதங்களாக தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இரு பெண்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வேலைவாய்ப்புக்கள் வெற்றிடங்கள் இருக்கின்றன.

உங்களுக்குத்தகுதியிருந்தால் அந்த வேலைகளைப் பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தை காட்டிப் பேசியுள்ளார்.இந்நிலையில், நகரசபையில் தற்காலிக அடிப்படையில் நாள் ஒன்றிற்கு 500ரூபா பெற்று பணியாற்றிவரும் இருவரும் வங்கி வேலைக்கு நேர்முகத்தேர்விற்குச் செல்வதற்கு முடிவு எடுத்துள்ளார்கள்.

முற்பணமாக 5ஆயிரம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது இதையடுத்து இருவரும் 10ஆயிரம் ரூபாவினை வவுனியாவில் (ஈஸி காஷ்) செய்து பணத்தை செலுத்தியுள்ளனர். இதையடுத்து தொடர்புகொண்டு குறித்த நபர் மேலும் 10ஆயிரம் ரூபா பணம் வைப்புச் செய்தால் திகதியை நிர்ணயிக்க முடியும் உடனடியாக அத்தொகையைச் செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த இருவரும் மேலதிகமாக 10ஆயிரம் ரூபாவினைச் செலுத்தியுள்ளனர். இருவரும் மொத்தமாக 20ஆயிரம் ரூபா செலுத்திய இந்நிலையில் குறித்த நபரின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சில தினங்களின் பின்னர் நிலைமைகளை நகரசபையின் உயர் அதிகாரி ஒருவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அவரின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் நிலையத்தில் முதற்கட்டமாக முறைப்பாடு மேற்கொள்வதற்கு சென்றபோது, பொலிசார் இழுத்தடிப்பு செய்துள்ளதுடன், முறைப்பாட்டினையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளப்பட்டு முறைப்பாடு நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.