மனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்?

நாட்டின் ஜனநாயகம், நீதி மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்ததனாலேயே மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக் கொண்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து மகிந்த ராஜபக்ச தன்னுடைய பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் இன்றைய தினம் ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது முறையாக பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

முன்னதாக, ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார் மைத்திரிபால சிறிசேன. அன்றிலிருந்து தொடர்ச்சியாக ஐம்பது நாட்கள் நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்தது.

மகிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போக, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதனையடுத்து 17 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழு ஆராய்ந்து நேற்றைய முந்தினம் தீர்ப்பு வழங்கியது. இரண்டு முறை மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு, 117 ஆசனங்களின் பெரும்பான்மையை நிரூபித்தார் ரணில். நீதிமன்றத் தீர்ப்பும் வெளிவந்த போது, மகிந்த ராஜபக்ச தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து கொண்டார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்களையடுத்து ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்பதற்கு மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டார். அதனடிப்படையில் இன்று பதவியேற்பும் நிகழ்ந்தது.

இது குறித்துப் பேசியுள்ள மைத்திரி, நாட்டின் ஜனநாயகம், நீதி மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்தனாலேயே மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக் கொண்டேன்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு தந்தாலும் ரணிலை நியமிக்க மாட்டேன் என்ற எனது தனிப்பட்ட கருத்தில் மாற்றமில்லை. நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் – ஜனநாயக மாண்புகளுக்கும் மதிப்பளித்தே நான் ரணிலை பிரதமராக நியமித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றால் தான் ஜனாதிபதி பதவியில் நீடிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.