திருக்கோணேஸ்வரம் ஆலயம் பற்றிய அதிசயிக்க வைக்கும் ஆலய வரலாறு …

திருக்கோணேஸ்வரம் ஆலயம் பற்றிய அதிசயிக்க வைக்கும் ஆலய வரலாறு …

திருக்கோணேஸ்வரம் ஆலயம் பற்றிய ஒரு பார்வை. காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகுப் புகழ்பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும், மேற்கே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களையும், தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். இக்குன்று அமைந்துள்ள பிரதேசத்தைப் பிரடெரிக்கோட்டை என்று அழைப்பர். ஈழத்திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவை பற்றிய வரலாறு, ஐதீகக்கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுகளிலே காணலாம். குவேறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட ‘The Temporal and Spiritual conquest of Celyon’ என்ற நூலிலும் இச்செய்தி காணப்படுகின்றது.திருக்கோணேஸ்வரம்கி.பி.1624 இல்

போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான், தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.
திருக்கோணேஸ்வரம்இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளை தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும் இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.