அப்பாவிக் குடும்பத்தை வீதியில் தள்ளிய திணைக்களம் : போராடிய 14வயதுச் சிறுமி!!

அங்கவீம்முற்ற தந்தை மற்றும் தாயுடன் வாழும் 14 வயது சிறுமியொருவர் தங்களுக்கு நிம்மதியாக வாழ இடம் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் குறித்த சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி அவர்களே நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானதா? என எழுதிய பதாகையினை ஏந்தியபடி கண்ணீருடன் சிறுமி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இந்த நிலையில், அம்பறை நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் குறித்த இடத்திற்குச் சென்று உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தை அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய். தாய் மற்றும் தந்தையுடன் அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு அருகில் வீட்டைக் கட்டி வசித்து வந்துள்ளார்.

குறித்த இடம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமானது எனக் கூறி குறித்த இடத்திற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தால் குறித்த குடும்பம் வீதிக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 700 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில். பொலிஸ் விசேட அதிரடிப்படை, அம்பறை மனநல வைத்தியசலை மற்றும் நகர சபை என்பன அந்தப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கைவிடப்பட்ட குறித்த குடும்பத்திற்கு அப்பகுதி கிராம உத்தியோகத்தர் தான் வசிக்கும் இடத்தில் ஒரு பகுதியில் தங்குவதற்கு இடம்கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டதாகக் கூறி வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிறுமியின் தாய்க்கு எதிராக அம்பாறை பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சிறுமியின் தாய் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதிக் காணி ஆணையாளர், தக்ஷிலா குணரத்ன குறித்த இடத்திற்கு சென்று சிறுமியுடன் கலந்துரையாடி, அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். குறித்தசிறுமி மாவட்ட செயலாளரிடம் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.