தமிழர்களை பழிவாங்காதீர்! நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காக தமிழர்களை பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ள கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும், டிலான் பெரேராவும் தலைமை தாங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டில் ஜனநாயக மீறல் இடம்பெற்றபோது, ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டிருந்தது. அதனை நாங்கள் பொறுப்புடன் நிறைவேற்றியிருக்கின்றோம்.

அதை நாங்கள் நிறைவேற்றிய காரணத்தால் சிலருக்கு கசப்பு ஏற்பட்டிருக்கின்றது. தவறான வழியில் பதவிகளைக் கைப்பற்ற முனைந்தவர்கள், ஜனநாய விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க விரும்பியவர்கள் ஆகியோர் நீதிமன்றங்கள் ஊடாக தடுக்கப்பட்டார்கள்.

அதன் காரணமாக அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கின்றது. மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கின்றது. அந்த மன உளைச்சலின் வெளிப்பாடுகளை அண்மைய நாட்களாக ஊடகங்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.

விதிமுறைகள் மீறப்பட்டபோது தட்டிக்கேட்டதுதான் என் மீது சிங்கள அரசியல்வாதிகள் விமர்சனங்களை முன்வைக்கக் காரணம். தவறாகச் செயற்பட்டவர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதுதான் அதற்கான காரணம்.

அவர்கள் சொல்வதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. எதையாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஊடகங்களில் எனது நண்பர்கள் இருவர் தயாசிறி, டிலான் பெரேரா ஆகியோர் கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.

ஏனென்றால் நான் சொன்னதைப் போன்று அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அரசியலிலே நண்பர்களும் கிடையாது; எதிரியும் கிடையாது என்று சொல்லுவார்கள். ஆனால், இவர்கள் இருவரையும் நெருங்கிய நண்பர்கள் என்று அழைப்பதற்கு முக்கிய காரணம் உண்டு.

இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வு சரியான முறையில் செய்யப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கும் அரசியல் அதிகாரங்கள் சரியான முறையிலே கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கின்றவர்கள் இவர்கள் இருவரும்.

எப்பொழுதெல்லாம் அதிகாரப் பகிர்வு பிரச்சினை எழும்போது, அதற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இவர்கள் இருவரும். சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் வெண்தாமரை இயக்கம் என்று அதிகாரப் பகிர்வு ஆதரவான அந்த இயக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர் டிலான் பெரேரா.

அந்தக் காலத்திலேயே பீரிஸின் உதவியாளராக, நிபுணராக அரசரமைப்பு உருவாக்கத்துக்கு உழைத்தவர் தயாசிறி ஜயசேகர. அன்றிலிருந்து இன்று வரைக்கும் அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ள வகையிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்தபோது, நாடாளுமன்றத்தில் 6 நாட்கள் விவாதம் நடந்தபோது அது பற்றி பயனுள்ள வகையில் உரையாற்றியிருந்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, சமஷ்டி என்று சொல்லப்பட்டால் அதற்கு நான் ஆதரவு கொடுப்பேன். அப்படி சொல்லப்படாவிட்டாலும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஆதரிப்பேன் என்று சொன்ன ஒரேயொரு சிங்கள அரசியல்வாதி.

ஆனால், இவர்கள் இருவரும் நாட்டிலே புதிய அரசமைப்பு உருவாகுவதை, சுமந்திரன் தன்னுடைய அவசரத்தினாலே குழப்புகின்றார் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

தேர்தல் நடைபெற இருக்கின்றது, தேர்தல் நடைபெற இருக்கின்ற காரணத்தால் இது செய்ய முடியாது என்று தோரணையில், அப்படி செய்ய முடியாமல் போய்விட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவாதகக் கட்சி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புரை செய்யப் போகின்றது என்று அவர்கள் கனவு கண்டு பெரிய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கின்றார்கள்.

இதுவரையில், முறையான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாகச் செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றோம். அதைத்தான் நாங்கள் உங்களிடத்தில் எதிர்பார்க்கின்றோம். நான் உங்களோடு முரண்பட விரும்பவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே இருக்கின்ற மிகவும் முற்போக்கான நீங்கள் இருவரும் அதிகாரப் பகிர்வுக்காக குரல் கொடுத்து, அது காலதாமதமில்லாமல் நிறைவேறுவதற்கு உங்கள் ஆதரவுகளையும் கொடுக்கவேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்சியை வெற்றியடைய விடாமல் தடுத்த ஒரு காரணத்துக்காக நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றவேண்டாம்.

அரசியல் சூழ்ச்சியை வெற்றி பெற அனுமதித்திருந்தால் அது நாட்டுக்கும் நல்லதல்ல. உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல. சரியானதை, செய்ய வேண்டியதைச் செய்தமைக்காக, அதிகாரப் பகிர்வு தொடர்பில் நீங்கள் இதுவரை பின்பற்றிய கொள்கையை கைவிட வேண்டாம்.

எங்களோடு சேர்ந்து பயணியுங்கள். நாங்கள் அவசரப்படவில்லை. 70 ஆண்டுகளாக காத்திருக்கின்றோம். இதில் அவசரப்படுகின்றோம் என்று சொல்வதற்கு எதுவும் கிடையாது.

அவசரமில்லை என்றாலும், காலதாமதம் இல்லாமல் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வையும் நாங்கள் கண்டுகொள்வதற்கு நாட்டிலே இருக்கின்ற இரண்டு முக்கிய கட்சிகளோடும் அதனைச் சேர்ந்து நிறைவேற்றுவதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நீங்கள் இருவரும் தலைமை தாங்க வேண்டும். அதனைச் செயற்படுத்த முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.