தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி!!

திருச்சி அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கர வடிவ ஆயுதத்தின் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தொன்மை குறியீட்டாய்வாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கல்தூண்

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை குறிக்கும் வடிவம், சித்திரமேழி பெரிய நாட்டாரின் சின்னங்களான உடுக்கை, ஏர் கலப்பை, 2 போர் வாள்கள், சக்கர வடிவ ஆயுதம், 2 குத்துவிளக்குகள், ஒரு முக்காலியின் மேலே பூர்ணகும்பம் ஆகிய புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அச்சிற்பங்களில் 19.5 செ.மீ, வெளிவிட்டம் அளவுடைய சக்கர வடிவ ஆயுதம் குறிப்பிடத்தக்கது ஆகும். தட்டையாக இல்லாமல் குவிந்த அமைப்புடையதும், மெல்லியதும், வெளிவட்டம் மட்டும் கூர்மையான நுனி உடையதுமான இதற்கு சக்குரும், சக்கர், சக்ரே, சலிக்கர் போன்ற பெயர்கள் உண்டு. இது பழங்கால போர் படை கருவிகளில் பாணிமுக்தா எனும் எறிந்து தாக்கும் வகையை சார்ந்தது.

அதிபயங்கர ஆயுதம்

ஆள்காட்டி விரலின் சுழற்சியாலோ அல்லது ஆள்காட்டி விரல், கட்டை விரல் ஆகிய இருவிரல்களால் பிடிக்கப்பட்டு முன் கையின் அதிவிரைவு அசைவாலோ எறிந்து தாக்கப்படும் இது எதிரிகளின் தலை, கை, கால்களை துண்டிக்கக்கூடிய அதிபயங்கர ஆயுதமாகும்.

மேலும் இது 12 செ.மீ. முதல் 30 செ.மீ. வரையிலான விட்டம் அளவுகளுடன் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் இரும்பு அல்லது பித்தளை ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதம் முறையே 40 முதல் 60 மீட்டர் அல்லது 80 முதல் 100 மீட்டர் வரை பறந்து சென்று எதிராளியை தாக்கக்கூடியது.

இந்த ஆயுதம் தமிழகம், பஞ்சாப் போன்ற இந்திய மாநிலங்களில் மட்டுமின்றி திபெத், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆயுதத்தை கையாளும் வல்லவர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர் என்பது இக்கண்டுபிடிப்பின் சிறப்பம்சமாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.