யார் இந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா? இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம்

விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.

சவேந்திர சில்வா, இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது பிரிவு கட்டளை அதிகாரியாக அவர் பணியாற்றியிருந்தார்.

இறுதிக்கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மோசமான போர்க்குற்றங்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக, தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில் இவர் குறித்து கடந்த காலங்களில் என்ன பேசப்பட்டன என்பதை தற்போது சுருக்கமாக பார்க்கலாம்.

விடுதலைப்புலிகளை 3 வருடங்களுக்கு முன்னர் தோற்கடித்த நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்த 58 வது படைப்பிரிவுக்கு தளபதியாக செயற்பட்ட சவேந்திர சில்வாவை அவரது சொந்த இணையத்தளம் “உண்மையான கதாநாயகன்” என்று வர்ணித்திருந்தது.

ஆனால், 58 வது படையின் பிராந்தியத்தை நோக்கி சரணடைவதற்காகச் சென்ற பல விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக ஐ.நா.வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட மனித உரிமைகள் குழு முன்னர் கூறியது.

அந்தவகையிலேயே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ,மன்னார் போன்ற பகுதிகளில் காணாமற்போனவர்களின் உறவினர்களும் சவேந்திர சில்வாவின் 58 ஆவது படைப்பிரிவிடமே தங்களது உறவினர்கள் இறுதியாக இருந்தனர் என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘பாதுகாப்பு வலயம்’ என அப்போதைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன் மருத்துவமனை மீது இராணுவம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இதனால் ஏற்கனவே தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களும் சிசிக்சை பெறவந்த நோயாளர்களும் உயிரிழந்தனர். குறித்த சம்பவம் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பெயரிலேயே நடத்தப்பட்டதாக OISL அறிக்கையும் வெளியானது.

மேலும் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வட்டுவாகல் பாலத்தில் வைத்து கைகுலுக்கிக் கொண்டதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வும் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த விடயமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது தலைமை அதிகாரியாக இன்று நியமனம் பெற்றுள்ளார்.